தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதியில், தரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ், குறிச்சி, காலகம், பின்னவாசல் ஆகிய சுகாதார நிலையங்கள் உள்ளன.
இங்கு ஆயிரக்கணக்கான ரத்தக்கொதிப்பு, சர்க்கரை மற்றும் இதய நோய் உள்ளவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு இ.சி.ஜி., ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்பட்டு இலவச மருந்து, மாத்திரைகள் மற்றும் தொடர் கண்காணிப்பு வழங்கப்பட்டு வந்தது.
தற்போது கரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், பேருந்துகள் இல்லாததாலும், வெளியில் செல்ல முடியாத நிலை இருப்பதாலும், முதியோர்கள், நோயாளிகள் கடந்த 15 தினங்களாக அவதிப்பட்டு வந்தனர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ம. கோவிந்தராவ் உத்தரவின் பேரிலும், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ரவீந்திரன் அறிவுறுத்தலின் பேரிலும், பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தர்ராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், பேராவூரணி அருகே உள்ள ஆவணம் பெரியநாயகிபுரம், துலுக்கவிடுதி, ஒட்டங்காடு, துறவிக்காடு, புனல்வாசல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடு தேடிச் சென்று பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தர்ராஜன் கூறுகையில், " பேராவூரணி வட்டாரத்தில் 1,127 ரத்தக்கொதிப்பு, சர்க்கரை மற்றும் இதய நோய் உள்ளவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது ஊரடங்கு உத்தரவால், பொதுமக்கள் சிகிச்சைக்கு வருவதில் உள்ள சிரமத்தை உணர்ந்து, வீடு தேடிச் சென்று சிகிச்சை அளித்து வருகிறோம்.
மொபைல் வாகனம் மூலம் இ.சி.ஜி. மெஷின், சர்க்கரை அளவு பரிசோதனை இயந்திரத்தை எடுத்துச் சென்று தேவைப்படுவோருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. திங்கள்கிழமை அன்று மட்டும் 42 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் இலக்கியா நெப்போலியன், பெரியநாயகிபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் வத்சலா முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில், இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள், மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மேலும், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கும் மருத்துவ ஆலோசனை வழங்கியுள்ளோம். இம்மாதத்தில், பிரசவிக்க உள்ள கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அரசு ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நோயாளிகளை தேடிச் சென்று மருத்துவ உதவி அளித்து வருகிறோம்" என்றார்.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தர்ராஜனுடன், டாக்டர் தீபா, டாக்டர் வெங்கடேஷ், மற்றும் மருத்துவ அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எஸ்.சந்திர சேகரன், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார செவிலியர்கள், ஆய்வக நுட்புநர்கள், மருத்துவ பணியாளர்கள், மருந்தாளுநர்கள் உள்ளிட்டோர் கரோனா வைரஸ் பீதியிலும், மருத்துவ சேவையில் ஈடுபட்டு வருவதை பொதுமக்களும், நோயாளிகளும் பாராட்டி உள்ளனர்.