“தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டது போல் வேறெந்த மாநிலத்திலும் நலத்திட்டங்கள் செய்யப்படவில்லை. இதன்மூலம் திமுக அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என்று நடிகை ரோகிணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மக்கள் ஒற்றுமை, மனிதநேயம் ஆகியவற்றை வலியுறுத்தி சேலத்தில் ஜன. 27ம் தேதி மினி மாரத்தான் போட்டி நடந்தது. மாணவ, மாணவிகள், பெரியவர்கள், பொதுமக்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைப்பின் மாநில புரவலரான நடிகை ரோகிணி, திரைப்பட இயக்குநர் கெளதம்ராஜ், தமுமுக பொதுச்செயலாளர் ஹாஜாகனி, அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் ஆகியோர் பரிசுகள், வெற்றி கோப்பைகளை வழங்கினர்.
அப்போது நடிகை ரோகிணி செய்தியாளர்களிடம் கூறியது; “பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகிறார். அவருக்கு தமிழ்நாடு பிடித்திருக்கிறது என்பதற்காக வருவதாக கருதிவிடக்கூடாது. அவ்வாறு அடிக்கடி வருவதன் மூலமாவது தன்னை தமிழர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று பிரதமர் கருதுகிறார். தமிழகத்தின் தேவையை அவர் பூர்த்தி செய்தால் நன்றாக இருக்கும். வெறுமனே வந்துவிட்டுப் போவது மட்டும் போதாது.
தாய்மொழியில்தான் நம் குழந்தைகள் கற்க வேண்டும். அவரவர் தாய்மொழியை முன்னெடுத்துப் படித்தால் எல்லா மொழிகளும் முக்கியத்துவம் பெறும். நம் மொழியை நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டும். ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராடித்தான் திராவிட இயக்கங்கள் வளர்ந்து உள்ளன. எப்போதும் நடக்கிற தாக்குதல் நடந்து கொண்டேதான் இருக்கும், நாமும் அதற்கான எதிர்வினையை ஆற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.
மாநில உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று முதல்வர் கூறுகிறார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் மகளிர் உரிமைத் திட்டம், நூலகங்கள் திறப்பு, புத்தகக் கண்காட்சிகள் நடக்கின்றன. வேறு எந்த மாநிலமும் இந்தளவுக்கு நலத்திட்டங்களைச் செய்யவில்லை. இவற்றின் மூலம் திமுக அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என்றார் நடிகை ரோகிணி.