கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை இயற்கை அழகுடன் விளங்கும் மலைப் பகுதி. இங்கு பெரியார், மேகம், செருக்கலூர் என பல நீர்வீழ்ச்சிகள் உள்ளன. பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமான அழகுடன் விளங்கும் இந்த மலைக்குச் சுற்றுலா பயணிகள் ஏராளமாக வந்து செல்வார்கள். இந்த நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதற்கும், மலையைச் சுற்றிப் பார்ப்பதற்கும், வெள்ளி மலையில் உள்ள பள்ளத்தாக்கில் படகு சவாரி செய்வதற்கும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
அப்படி வருபவர்கள் நீர்வீழ்ச்சிகளில் குளிக்கும்போது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. சமீபத்தில், நீர்வீழ்ச்சியில் குளிக்கவந்த 11 வயது மாணவன் மாயமாகி அவரது உடலைக் கடந்த ஒருவாரமாக தேடிவருகிறார்கள். இன்னும் அவரது உடலைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இப்படிப்பட்ட நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக், “பொதுமக்கள் நலன் கருதி நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது” என அறிவித்துள்ளார். இதையடுத்து, நீர்வீழ்ச்சி பகுதிகளில் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மழைக்காலம் முடிந்த பிறகும் நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதற்கும் மலையைச் சுற்றிப் பார்ப்பதற்கும் வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த பாதுகாப்புடன் வந்து செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வையும் மாவட்ட காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.