
மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை முறையாக பராமரிக்க வேண்டும் என்று மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து திமுக துணை பொதுச்செயலாளரும் தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.
அந்த கோரிக்கை மனுவி, “என் தொகுதியான தூத்துக்குடியில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் உள்ள சாலைகளின் பராமரிப்பு பணிகளை விரைவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை NH-38 (பழைய NH-458) நான்கு வழிச்சாலையில் பல பிளாக் ஸ்பாட் (Blackspots) இருப்பதால், பொதுமக்களுக்கு பெரும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை 38-ல், துரைசாமிபுரம், கீழ ஈரால், குறுக்குச்சாலை ஆகிய பகுதிகளில் பாதுகாப்பற்ற சாலைகள் அடையாளம் காணப்பட்டு 2015-18 காலகட்டத்திலேயே பட்டியலிடப்பட்டிருந்தாலும், இதுவரை இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) எந்தப் பணிகளும் தொடங்கப்படவில்லை. இந்த பாதுகாப்பற்ற சாலைகள் அகற்றுவதற்கான பணிகள் விரைந்து முடிக்கப்படுமானால், பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் மற்றும் பல்வேறு விபத்துகளைத் தவிர்க்கலாம்.
எனவே, மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை 38-ன் பாதையில் உள்ள பாதுகாப்பற்ற சாலைகள் அகற்றுதல் மற்றும் பராமரிப்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.