திருவாரூர் அருகே கஜா நிவாரண பொருட்களை வழங்காமல் முறைகேட்டில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்களை பதவி நீக்க கோரி 100 க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அரசு வழங்கும் நிவாரணம் முறையாக வழங்கப்படவில்லை, முறைகேடு நடப்பதாகவும், ஒருசாராருக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி பல்வேறு இடங்களில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருவாரூர் அருகே குளிக்கரையில் நேற்று இரவு தனியார் திருமணமண்டபத்தில் ஆனைவடபாதி, பெருந்தரக்குடி, தேவர்கண்டநல்லூர், குளிக்கரை உள்ளிட்ட 4 ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டிய நிவாரண பொருட்கள்வைக்கப்பட்டிருந்து. இந்த நிவாரண பொருட்கள் இதுவரை வழங்கப்படவில்லை.
இந்நிலையில் நிவாரணப் பொருட்களை வழங்காமல் நேற்று நள்ளிரவில் கிராம நிர்வாக அலுவலர்கள் திலகவதி, துர்கா ராணி இருவரும் நிவாரணப் பொருட்களை
வாகனங்களில் ஏற்றி வேறு பகுதிக்கு எடுத்து செல்ல முயன்றபோது அவர்களை அப்பகுதிமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து
அங்கு வந்த காவல்துறையினர் அதிகாரிகளை மீட்டு இன்று காலையில் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவித்திருந்தனர்.
ஆனால் இன்று காலையில் முதலே பாதிக்கப்பட்ட மக்கள் அதிகாரிகள் வருகைக்காக காத்திருந்தனர். ஆனால் மதியம் ஆனாதே தவிர வருவதாக தெரியவில்லை, இதனையடுத்து ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு மேப்பளம் என்ற இடத்தில் அனைவருக்கும் நிவாரண பொருட்களை வழங்கிட வேண்டும் என சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது நிவாரண பொருடகள் வழங்காமல் முறைகேடில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கையை ஏற்று அனைத்து மக்களுக்கும் நிவாரண உதவிகளை வழங்குவதாக உறுதி அளித்த பின் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் போராட்டம் காரணமாக மன்னார்குடி - திருவாரூர் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.