சேலத்தில் குடும்ப தகராறில் குழந்தையை பெற்றவர்களே தெருவில் விட்டு சென்ற நிலையில், சிறுவன் ஒருவன் குழந்தைக்கு ஆதரவளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சேலத்தில் டூ வீலர் மெக்கானிக் வேலை செய்து வரும் ஒருவர், மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக தங்களுடைய மூன்று வயது குழந்தையை கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் உள்ள ஒரு தெருவில் விட்டுவிட்டு சென்று விட்டார். ஆதரவின்றி அந்த குழந்தை சுற்றித் திரிந்த நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த கோகுல் என்ற பத்து வயது சிறுவன் ஆதரவளித்து குழந்தையுடன் விளையாடி வந்தான்.
ஆதரவற்ற குழந்தை ஒன்று சிறுவன் ஒருவனுடன் இருப்பது தெரிந்து, போலீசார் குழந்தையை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் அந்த குழந்தை அச்சிறுவனை விட்டு பிரிய மறுத்து, அடம் பிடித்து அழுதது. இதனால் சிறுவன் கோகுலையும் சேர்த்து காவல் துறையினர் குழந்தையுடன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அதன் பிறகு மனம் மாறி திரும்பவும் குழந்தையைத் தேடி வந்த பெற்றோரை எச்சரித்த போலீசார் 'உங்கள் பிரச்சனைக்காக இப்படியா குழந்தையை தெருவில் விட்டுவிட்டுப் போவது' என கடுமையாக எச்சரித்த பிறகு குழந்தையை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். குழந்தையை எடுத்து ஆதரவளித்து அதனுடன் விளையாண்ட சிறுவன் கோகுலுக்கு டிஎஸ்பி ரமேஷ் ஜாமென்ட்ரி பாக்ஸ் பரிசாக அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.