பல்லடம் படுகொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு என்ற கிராமத்தில் வசித்து வந்த செந்தில்குமார் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மோகன், புஷ்பவதி, ரத்தினாம்பாள் ஆகிய நான்கு பேரும் வசித்து வரும் வீட்டு வாசலின் அருகே அண்மையில் மது அருந்த வந்த வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர்களிடம் இங்கு மது அருந்தக் கூடாது என 4 பேரும் தெரிவித்துள்ளனர். இதனால் நடந்த வாக்குவாதத்தில் வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர்கள், செந்தில்குமார் உள்ளிட்டவர்கள் தட்டிக் கேட்ட நான்கு பேரையும் வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த படுகொலை சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அதே சமயம் கொலையில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் வெங்கடேசன் திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த செல்லத்தம்பி ஆகியோரை போலீசார் கைது செய்திருந்தனர். இதனையடுத்து வெங்கடேஷ், சோனை முத்தையா ஆகிய இருவரும் திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் சரணடைந்தனர். அதே சமயம் மற்றொரு முக்கிய குற்றவாளியான வெங்கடேஷின் தந்தை ஐயப்பனையும் போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷின் தம்பி விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட விக்னேஷிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். ஏற்கனவே இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 5 ஆவது நபராக விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.