ஏற்றத்தாழ்வு நிறைந்த இந்த சமுதாயத்தில், ஒரு நல்வாழ்வை வழிநடத்திச்செல்ல அன்பும், ஒற்றுமையும், அரவணைப்பும், அர்ப்பணிப்புமே மூலதனம். வாழ்க்கைக்கான இந்த மூலதனத்தை நம்மைத் தாண்டி, வருங்கால தலைமுறையினருக்கும் கடத்த வேண்டிய தேவை நமக்கு உறுதியாக இருக்கிறது. இன்று, நாம் வாழும் உலகம், பொருளாதாரம் சார்ந்த, உடல் சார்ந்த, மனம் சார்ந்த சிக்கல்களாலும், பிரிவுகளிலும் சூழ்ந்திருக்கிறது. இந்த சிக்கல்கள் மனிதர்களுக்கிடையே எல்லைகளை வகுத்து, சமூக கட்டுப்பாடு அமைத்து, ஒரு சமூக நோயைப்போல் மாற்றிவிடுகிறது.
இந்த நிலையால், குழந்தைகளில் ஆரம்பித்து பெரியவர்கள் வரை, லட்சக்கணக்கான மக்கள் சமூக புறக்கணிப்பையும், நெருக்கடியான சூழ்நிலைகளையும் எதிர்கொள்கிறார்கள். இந்த நிலைமை பல ஆண்டுகளாகத் தொடர்கதையாக வருவதற்கு, தெரிந்தோ தெரியாமலோ நாமும் ஒரு காரணமாகி விட்டோம். நம் சமுதாயத்தில் மிகவும் கவனிக்கவேண்டிய, அதிகம் உதவிசெய்யவேண்டிய இடத்தில் இருக்கும் குழந்தைகளில் மிக முக்கியமானவர்கள் ஆட்டிசமால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்.
ஆட்டிசம் என்பது ஒரு நோய் அல்ல; அது ஒரு வளர்ச்சி குறைபாடுதான் என்ற புரிதலுக்கு வரவேண்டிய தேவை நமக்கு இருக்கிறது. இந்தியாவில், 68 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்படுவதாக ஒரு ஆய்வு சொல்கிறது. மருத்துவ உலகில் ஆட்டிசத்தை குணப்படுத்த பல்வேறு முயற்சிகள், போராட்டங்கள் நடந்தாலும், சமூக ரீதியாக நாம் அவர்களை அன்போடும், அக்கறையோடும் நடத்தவேண்டிய தேவையும், கடமையும் நமக்கு இருக்கிறது.
அப்படி சமீபத்தில், சென்னையில் நடந்த ஒரு நிகழ்வு நம் கடமையின் வெளிப்பாடே. அந்த நிகழ்வு பெருவாரியான மக்களுக்கு ஒரு பெரிய விழிப்புணர்வாகவும் அமைந்தது. சென்னையில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி, வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த நிகழ்வு ஆட்டிசமால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஒரு சமூக திருவிழாவாக அமைந்தது. 2015 ஆம் ஆண்டு, சென்னையில் நிறுவப்பட்ட ஊருணி அமைப்பு(Ooruni Foundation) ஆட்டிசமால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒவ்வொரு வருடமும் 'Freedom Carnival' என்ற இந்த நிகழ்வை நடத்துகிறது.
இந்த ஆண்டு, வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற 'Freedom Carnival' நிகழ்வில், ஆட்டிசமால் பாதிக்கப்பட்ட 1500 பேர் கலந்துகொண்டனர். பல்வேறு இல்லங்களில், அரசு பள்ளிகளில் வளர்க்கப்படும் இவர்கள், கடந்த ஞாயிறன்று, அவர்களின் பெற்றோருடன் ஒன்றிணைத்து கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்வு, அவர்களுக்காக, அவர்களின் உலகமாக மாறியதாக, கலந்துகொண்டவர்கள் தெரிவித்தார்கள்.
இந்த நிகழ்வில், ஆட்டிசமால் பாதிக்கப்பட்டவர்கள், நடனம், விளையாட்டு, பாடல் என அவர்களுக்கு பிடித்தமான, பொழுதுபோக்கான எதோ ஒன்றை செய்துகாட்டினார்கள். கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசுகளை வழங்கி ஊருணி அமைப்பு அவர்களை சிறப்பித்தது. இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஊருணி அமைப்பு கவனித்துக்கொண்டாலும், தன்னார்வலர்கள் அனைவரும் வேற்றுமைகளை களைந்து அங்கு வந்தவர்களுக்காக தொண்டாற்றினார்கள்.
இந்த Freedom Carnival நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் ஆட்டிசமால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களுடைய ஒரு நாள் முழுவதையும் அர்பணித்தார்கள். ஆட்டிசமால் பாதிக்கப்பட்ட சுமார் 1500 பேரை ஒரு இடத்தில் ஒருங்கிணைத்து, அவர்களுக்காக ஒரு உலகை வடிவமைத்து, ஒரு நாள் முழுவதும் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய, அவர்களை கொண்டாடிய Freedom Carnival நிகழ்வு பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
இது தொடர்பாக ஊருணி அமைப்பின் நிர்வாக டிரஸ்டி பொன்னுசாமி கூறுகையில், "ஆறு நண்பர்கள் சேர்ந்து இந்த அமைப்பை ஆரம்பித்தோம். கல்வி வழங்குதல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல், அதிகாரமளித்தல் போன்ற நோக்கங்களோடு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். ஏராளமான குழந்தைகளை நாங்கள் படிக்கவைத்து கொண்டிருக்கிறோம். சுற்றுச்சூழல் ரீதியாக நாங்கள் இதுவரை தமிழகம் முழுக்க ஒன்றரை லட்சம் மரங்களை நட்டுள்ளோம், பல்வேறு ஏரிகளை தூர்வாரியுள்ளோம். அதிகாரமளித்தல் நோக்கமாக நாங்கள் இந்த Freedom Carnival நடத்துகிறோம். வருடா வருடம் நாங்கள் இதை நடத்துகிறோம். இப்போது நடந்தது எட்டாவது நிகழ்வு."
"நாங்கள் இந்த நிகழ்வை ஆரம்பித்த பொழுது, ஆட்டிசமால் பாதிக்கப்பட்ட 150 குழந்தைகள் கலந்துகொண்டார்கள். இன்றைக்கு 1500 பேர் கலந்துகொண்டார்கள். மொத்தமாக ஆசிரியர்கள், பெற்றோர்கள் என 2,500 பேர் தற்போது நடந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள். ஒரு பெரிய திருவிழாவை போல் நடக்கிறது. இந்த நிகழ்வுகளெல்லாம் நடக்க மிக முக்கிய காரணம் தன்னார்வலர்கள்தான். துடிப்பு மிக்க இளம் தன்னார்வலர்கள், பல்வேறு மக்களின் அன்பான உதவி, கொடையால் தான் இந்த Freedom Carnival வெற்றியடைகிறது. பல்வேறு இளைஞர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு, ஆட்டிசமால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பார்க்கிறார்கள். அவர்களின் சிரமங்களை புரிந்துகொள்கிறார்கள். பின்பு அவர்களை மதிக்க தொடங்குகிறார்கள். எங்களுக்கு அது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது", என்றார்.
ஊருணி அமைப்பின் டிரஸ்டி ஆறுமுகம் கூறுகையில், "2015 ஆம் ஆண்டு, சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட சமயத்தில் ஆரம்பிக்கப்பட்டது ஊருணி அமைப்பு. தன்னார்வலர்களின் ஆர்வத்தை பார்த்து நாங்கள் இந்த அமைப்பை விரிவுபடுத்தினோம். நாங்கள் பல்வேறு மாணவர்களுக்கு அவர்களின் கல்விக்காக ஊக்கத்தொகை கொடுத்துள்ளோம். இந்த Freedom Carnival ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டம். இந்த வருடத்திற்கான Freedom Carnival கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திமுடிக்கும்போது, அவர்கள் முகத்தில் சந்தோசத்தை பார்த்தபோது, எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது", எனத் தெரிவித்தார்.