மாடல் ஜெசிகா லால் மரணம் குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி நம்மிடையே விளக்குகிறார்.
ஜெசிகா லால் என்ற 34 வயது பெண்ணின் வழக்கு இது. டெல்லி தெற்கு பகுதியில் இருக்கும் மெக்ராலி என்ற பகுதியில் சின்ன சின்ன மலைகள், கோட்டைகள் காணப்படும். அந்த பகுதியில் பழங்காலத்து வீடுகள் நிறைய இருக்கும். அப்படிப்பட்ட பழைய வீடு ஒன்றை வாங்கி அதைப் புதுப்பித்து டெமரிட் கோர்ட் என பெயர் வைத்து பார்ட்டி நடக்கும் இடமாக மாற்றி வியாபாரம் செய்து வந்தவர் பினா ரமணி. இவரின் டெமரிட் கோர்ட்டில் ஒவ்வொரு வார வியாழக்கிழமையன்று சிறப்பான ஏற்பாடுகளுடன் பார்ட்டிகள் நடந்து வந்தது. அந்த பார்ட்டியில் அன்றைய தேதியில் இசைத் துறையில் சிறந்து விளங்கிய இசைக்கலைஞர்கள் பாடல் பாடுவார்கள். அதே போல் பார்டிக்கு வருபவர்களுக்கு மது பரிமாற மாடலாக இருப்பவர்கள் சினிமாவில் நடிப்பவர்கள் அங்கு வேலை செய்து வந்தனர். அந்த பார்ட்டிக்கு வருபவர்களும் சாமானிய மனிதர்களாக இல்லாமல் எல்லோரும் நடிகர்கள், அரசியல்வாதி மகன்கள் என அதிகார பின்புலம் கொண்டவர்களாக இருந்தனர்.
அப்படிப்பட்ட இடத்தில் 29.04.1999ஆம் ஆண்டு நடந்த பார்ட்டியில் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். அங்கு 12 மணிக்கு மேல் மது கிடைக்காது என்று போர்டு வைத்துள்ளனர். அந்த போர்டு பெரிதாக யார் கண்ணிலும் படாத அளவுக்கு ஒரு இடத்தில் மாட்டி வைத்துள்ளனர். பார்ட்டி நடைபெறும் இடத்திற்கு பினா ரமணி லைசன்ஸ் வாங்காமல் சட்ட விரோதமாக அங்கு பார்ட்டி நடத்தி வந்துள்ளார். அதனால் அதிகாரிகள் விசாரித்தால் பிரைவேட் பார்டி நடப்பதாக சொல்லுங்கள் என்று வேலை பார்ப்பவர்களிடம் சொல்லியிருக்கிறார். பினா ரமணி கணவரின் முதல் மனைவிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அதில் இரண்டாவது பெண் மாடலிங் செய்து வந்துள்ளார். அவருடன் சேர்ந்து மாடலிங் செய்து வந்த ஜெசிகா லால் அந்த பார்ட்டியில் வேலை செய்திருக்கிறார். அந்த பிரைவேட் பார்டி தன்னுடைய கணவர் வெளிநாடு செல்வதற்கு நடைபெற்ற பார்ட்டி என்று முன்பே வேலை பார்ப்பவர்களிடம் பினா ரமணி சொல்லியிருக்கிறார். இதற்கிடையில் மனு ஷர்மா என்ற 23 வயதுடைய இளைஞர் அந்த பார்ட்டியில் பங்கேற்க வருகிறார். இவரின் அப்பா காங்கிரஸ் கட்சியின் பிரமுகராகவும் ஒன்றிய அரசின் அமைச்சராகவும் இருந்தவர். இந்தியாவின் ஒன்பதாவது குடியரசுத் தலைவராக இருந்த சங்கர் தயாள் சர்மாவின் உறவுக்காரராக மனு ஷர்மாவின் அப்பா இருந்தார். இப்படிப்பட்ட பின்னணி கொண்ட மனு சர்மா பார்ட்டி நடப்பதற்கு முன்பு தனது அம்மாவை அழைத்துக்கொண்டு வெளியூர் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். ஆனால் பார்ட்டி நடப்பதால் முதலில் பார்ட்டியை முடித்து விட்டுச் செல்லலாம் என்று நினைத்துக்கொண்டு, இரவு 10 மணிக்கு வண்டியை எடுத்துக்கொண்டு ஃபரண்ட்ஸ் காலணி என்ற பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு 32 வயதுடைய ஏ.எஸ்.கில் மற்றும் அவருடைய நண்பர், ராஜ்ஜிய சபா எம்.பி. மகன் யாதவ ஆகியோரை சந்தித்துள்ளார். சந்தித்ததோடு நால்வரும் பார்ட்டி நடக்கும் டெமரிட் கோர்ட்டிற்கு வந்துள்ளனர். அங்கு போவதற்கு முன்பே அந்த நான்கு பேரும் அதிகளவு மது அருந்தியிருக்கின்றனர்.
போதையில் இரவு 11.45 மணியளவில் அந்த நான்கு பேரும் டெமரிட் கோர்ட்டிற்கு வந்துள்ளனர், அங்கு தொடர்ந்து மனு ஷர்மா மது அருந்தியுள்ளார். 12 மணிக்கு மேல் மனு ஷர்மா மது வேண்டுமெனக் மது பரிமாறுபவர்களிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர்கள் மது காலியாகிவிட்டதாக சொல்லியிருக்கின்றனர். அவர்கள் சொல்வதை நம்பாத மனு ஷர்மா ஜெசிகா லாலிடம் சென்று ஒரு சொட்டு மது எனக்கு கொடுக்க மாட்டியா நீ? உனக்கு ரூ.1000 கொடுக்கிறேன் ஒரே ஒரு சொட்டு மது கொடு என்று கேட்டுள்ளார். அதற்கு ஜெசிகா நீ எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஒரு சொட்டு மதுகூட தர முடியாது, மது காலியாகிவிட்டது என்று கூறியிருக்கிறார். கோபப்பட்ட மனு ஷர்மா ஜெசிகாவிடம், உன் கிட்ட இருந்து ஒரு சொட்டு எடுத்துக்கொள்ளவா? என்று அசிங்கமாகப் பேசியிருக்கிறார். அதனால் கோபமான ஜெசிகா முதலில் நீ இடத்தை காலி பண்ணு என்று சத்தம் போட்டுள்ளார். மனு ஷர்மா தன் பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டுவிடுவேன் என்று சொல்லி மிரட்டியிருக்கிறார். கூட்டத்தில் ஒருவர் அது பொம்மை துப்பாக்கி என்று கூற, மனு ஷர்மா துப்பாக்கி எடுத்து மேலே சுட்டுள்ளார். அதைப் பார்த்த ஜெசிகா இதற்கெல்லாம் பயப்பட முடியாது என்று சொல்ல, ஜெசிகா லாலின் நெற்றியில் மனு ஷர்மா சுட்டுள்ளார். சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ஜெசிகா உயிரிழந்துள்ளார். இரவு 2 மணிக்கு நடந்த இந்த சம்பவம் அதிக இசை சத்தத்தால் பார்ட்டியில் இருந்தவர்களுக்கு 20 நிமிடம் வரை தெரியாமலே இருந்தது. தாமதமாக நடந்த சம்பவத்தை தெரிந்து கொண்ட பினா ரமணி, மனு ஷர்மாவின் சட்டையைப் பிடித்து ஏன் சுட்ட என்று கேட்டுள்ளார். அதற்கு மனு ஷர்மா பயப்படாமல் பினா ராணியின் கையை தட்டிவிட்டு, தான் எதுவும் செய்யவில்லை என்று சாதாரணமாகச் சொல்லியிருக்கிறார். மனு ஷர்மா அப்படி நடந்துகொண்டது, தவறான ஆளைப் பிடித்துவிட்டோமா? என்று பினா ரமணி யோசிக்கும் அளவிற்கு இருந்தது.
அதன் பிறகு பினா ரமணி, அருகிலுள்ள மருத்துவமனைக்கு ஜெசிகா லாலை அழைத்துச் சென்றுள்ளார். மறுநாள் காலையில் ஜெசிகா லால் இறந்தது பொது வெளிக்கு தெரிய வருகிறது. சம்பவம் நடந்த இரவு மனு ஷர்மா மற்றும் அவருடன் வந்தவர்கள் மீண்டும் ஏ.எஸ்.கில் வீட்டிற்கு சென்றுள்ளனர். பிறகு மனு ஷர்மா துப்பாக்கியை மறைத்து வைத்துவிட்டு தன் நண்பர்களை பிரிந்து செல்ல சொல்லியிருக்கிறார். நடந்த சம்பவம் காவல்துறைக்குத் தெரிந்த பிறகு, அவர்கள் மனு ஷர்மாவை வலை விரித்துத் தேடினர். ஆனால் மனு ஷர்மா எங்கு தேடியும் கிடைக்கவில்லை. நான்கு நாட்களுக்குப் பிறகு மனு ஷர்மாவின் நண்பர்கள் காவல்துறையினரிடம் சிக்கிவிடுகின்றனர். அவர்களை விசாரித்த பின்பு ஒரு வாரம் கழித்து ஹிமாச்சல் பிரதேசத்தில் மனு ஷர்மா போலீசாரிடம் சிக்கி இருக்கின்றார். மனு ஷர்மா செய்த தவறை போலீசாரிடம் ஒப்புக்கொள்ளவில்லை. அதன் பிறகு ஜெசிகா லாலை சுட்ட துப்பாக்கியை போலீசார் தேடியதில் துப்பாக்கியும் கிடைக்கவில்லை. அந்த துப்பாக்கி இன்றளவும் கிடைக்காமல்தான் இருக்கிறது. சம்பவம் நடந்த இடத்தில் துப்பாக்கி குண்டிலிருந்து சிதறிய பாகம் மட்டும்தான் கிடைத்தது. பார்ட்டிக்கு வந்தவர்கள் சம்பவம் நடப்பதற்கு முன்பே சென்று விட்டோம் என்று போலீசாரிடம் சொல்லியிருக்கின்றனர். பார்ட்டிக்கு வந்த 300 பேரும் பெரிய அளவில் அதிகார பின்புலம் கொண்டவர்களாக இருந்ததால், எல்லோரும் ஏதோ ஒரு வகையில் சம்பவத்தை பார்க்கவில்லையென்று போலீசாரிடம் கூறியிருக்கின்றனர். டெமரிட் கோர்ட்டில் ஜெசிகா லாலுடன் பணியாற்றி வந்த முன்ஷி என்ற நபர் சம்பவத்தைப் பார்த்ததாக ஜெசிகா லாலின் தங்கையிடம் கூறியிருக்கிறார். அவருடன் சேர்ந்து அங்கு வேலை பார்த்த 30 பேரிடம் வாக்கு மூலம் பெற்ற போலீசார். குற்றப்பத்திரிக்கை தயார் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்தவர்கள் பின்வாங்கியதால் இந்த வழக்கில் மனு ஷர்மா மற்றும் அவரின் நண்பர்களை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவ்வழக்கு குறித்த மேலும் விவரங்களை அடுத்த தொடரில் காணலாம்...