ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் உள்ள பகுதியில் கடந்த 24ஆம் தேதி நாய் ஒன்று ஒரு பெண்ணின் கையை வாயில் கவ்விக் கொண்டு சுற்றி திரிந்துள்ளது. இதனை அறிந்த போலீசார், அந்த கையை கொண்டு துப்பு துலக்கி, அங்குள்ள ஒரு காட்டில் இருந்த மற்ற உடல் பாகங்களையும் கண்டுபிடித்தனர். அந்த உடல் பாகங்களை மீட்கப்பட்ட இடத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் ஆதார் அட்டை உள்ளிட்ட பொருட்கள் இருந்துள்ளது. அதனை வைத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாருக்கு தகவல் கொடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அந்த இளம்பெண் தனது காதலனுடன் குந்தி பகுதிக்கு வந்ததாக தெரியவந்தது.
அந்த தகவலை வைத்து பெண்ணின் காதலனை பிடித்து போலீசார் கிடுக்குபிடி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், இளம்பெண்ணை கொலை செய்ததை தான் தான் என அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, அவரிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தைச் சேர்ந்த நரேஷ் பெங்க்ரா (25) தமிழ்நாட்டில் உள்ள கசாப்பு கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். குந்தி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் நரேஷ், தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வருடங்களாக லிவ் இன் உறவில் வாழ்ந்து வந்துள்ளார்.
தமிழ்நாட்டில் வேலை பார்க்கும் நரேஷ் அடிக்கடி, தனது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அதன்படி, சில மாதங்களுக்கு முன்பு, சொந்த ஊருக்கு திரும்பிய இவர், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இது பற்றி லிவ் இன் உறவில் இருந்த பெண்ணிடம் கூறாமல், மனைவியை ஊரிலேயே விட்டு விட்டு தமிழ்நாட்டிற்கு வந்த அந்த இளம்பெண்ணுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், அந்த பெண் சொந்த ஊருக்கு சேர்ந்து செல்லும்படி நரேஷை தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதில் விருப்பமில்லாத நரேஷ், கடந்த 8ஆம் தேதி அந்த பெண்ணை தனது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அந்த பெண்ணை துப்பாட்டாவை வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை 50 துண்டுகளாக வெட்டியுள்ளார். இதையடுத்து, துண்டு துண்டுகளாக் உடல் பாகங்களை காட்டுக்கு எடுத்துச் சென்று அங்குள்ள விலங்குகளுக்கு இரையாக கொடுத்து மீண்டும் தனது மனைவியுடன் வாழ தொடங்கியிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.நரேஷிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.