Skip to main content

ஏழு தமிழர்கள், முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்கும் விடுதலையை சாத்தியப்படுத்த வேண்டும் - எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை 

Published on 20/11/2018 | Edited on 20/11/2018
tn


 

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் குற்றவாளிகள் எப்படி கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்களோ, அதேப்போன்று, ஏழு தமிழர்களும், முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் உட்பட பத்து வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் அனைத்து ஆயுள் சிறைவாசிகளின் விடுதலையையும் தமிழக அரசு சாத்தியப்படுத்த வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
 

தர்மபுரியில் பேருந்து எரிக்கப்பட்டு மூன்று மாணவிகள் கொல்லப்பட்ட வழக்கில், ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த அதிமுக.வைச் சேர்ந்த நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியன் ஆகிய மூன்று பேரும் பத்து ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்ட நிலையில், கருணை அடிப்படையில் கவர்னரின் ஒப்புதலுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த மூன்று பேரும் தாங்கள் செய்த குற்றத்திற்காக பத்து ஆண்டுகள் சிறையில் தண்டனையை அனுபவித்து உள்ளனர். இவர்கள் தமிழக அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில், கருணை அடிப்படையில் கவர்னரின் ஒப்புதலோடும், மாநில அரசின் பரிந்துரையோடும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 

ஆனால், இதேப்போன்று விடுதலையாவதற்குண்டான அனைத்து தகுதிகளையும் உடைய, பேரறிவாளன், முருகன் உட்பட ஏழு தமிழர்களின் விடுதலை மற்றும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை மறுக்கப்பட்டு பாரபட்சம் காட்டப்படுகிறது.

ஏழு தமிழர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் வழிகாட்டிய பிறகும், கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அவர்களின் விடுதலை கிடப்பில் போடப்பட்டுள்ளது. 
 

அதேபோல் 10 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் விடுதலையும் கவர்னர் தலையீடு காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. முஸ்லிம் அமைப்புகள் மட்டுமின்றி, அனைத்து மனித உரிமை அமைப்புகள், அவர்களின் குடும்பங்கள், தொடர்ந்து போராட்டங்களையும், கோரிக்கைகளையும் வைத்துவரும் நிலையில் முஸ்லிம் என்ற காரணத்திற்காக விடுதலை மறுக்கப்பட்டு வருகின்றது.
 

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில், குற்றவாளிகள் ஆளுங்கட்சி தரப்பை சேர்ந்தவர்கள் என்பதற்காக விடுதலைக்கு ஒப்புதல் அளித்த கவர்னர், ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற மாநில அமைச்சரவையின் முடிவையும், முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யும் தமிழக அரசின் பரிந்துரையையும் கிடப்பில் போட்டு விடுதலையை மறுக்கும் பாரபட்ச போக்கை கவர்னர் கைவிட வேண்டும். 
 

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் குற்றவாளிகள் எப்படி கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்களோ, அதேப்போன்று, ஏழு தமிழர்களும், முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் உட்பட பத்து வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் அனைத்து ஆயுள் சிறைவாசிகளின் விடுதலையையும் தமிழக அரசு சாத்தியப்படுத்த வேண்டும். தமிழக அரசு இந்த விஷயத்தில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

 


 

சார்ந்த செய்திகள்