கூட்டணியில் இருப்பதால் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்தார் என பாஜக மூத்தத் தலைவர் எச். ராஜா தெரிவித்தார்.
திருச்சியில் செவ்வாய்க்கிழமை(2.1.2024) இரவு நடைபெற்ற பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசியபோது, “பிரதமர் வருகையானது தமிழக மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவினருக்கு ஊக்கத்தை கொடுத்திருக்கிறது. தமிழகத்திற்கு மட்டும் ரூ.11 லட்சம் கோடியில் திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறைக்கு மட்டும் ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சியில், மேம்பாட்டில் பிரதமர் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார் என்பது அவரது பேச்சில் தெரிந்தது. தமிழகத்தில் உள்ள அனைவரையும் பிரதமர், தனது குடும்ப உறுப்பினராக நினைக்கிறார். அதனால்தான் பேச்சைத் தொடங்கும் போது, எனது குடும்ப உறுப்பினர்களே எனத் தெரிவித்தார்” என்றார்.
இதனைத் தொடர்ந்து, பேசிய பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, பிரதமர் வரவேற்புக்கு வழக்கத்தை விட அதிகமான கூட்டம் இருந்தது, அரசியலில் ஒரு மாற்றம் நிகழ்வதை உணர்த்தியுள்ளது. தென்மாவட்ட வெள்ள பாதிப்பில் தமிழக அரசின் செயல்பாடு மீது பொதுமக்களுக்கு அதிருப்தி நிலவுவதால், பிரதமர் வருகையையொட்டி ‘வணக்கம் மோடி’ வாசகம் சமூக வலைத்தளங்களில் பிரபலமானது. இதன் காரணமாகவே தமிழக முதல்வர் பேசும்போதும், முழக்கம் எழுப்பப்பட்டது. மேலும், பிரதமர் மோடி வந்ததால், உற்சாக மிகுதியில் பொதுமக்களும், தொண்டர்களும் முழக்கம் எழுப்பினர். அந்த உற்சாகத்தை கட்டுப்படுத்துவது கஷ்டம்.
தமிழகம் ஊழலில் திளைத்து வருகிறது. தற்போது ஒவ்வொருவராக சிக்கி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் பொன்முடியை போல, அடுத்தடுத்து தமிழகத்தின் மூத்த அமைச்சர்கள் சிறை செல்வார்கள். பல்வேறு கட்சியினர் என்டிஏ கூட்டணிக்கு வர வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதில் ஓ.பி.எஸ்ஸும் ஒருவர். அவருடைய கட்சியும் என்டிஏ கூட்டணியில் இருக்கிறது. அதனால் சந்தித்தார்” என்றார்.