வறுமையினால் பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாமல் போனதால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத தனியார் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.
நாகை மாவட்டம், நாகூர் அடுத்துள்ள முட்டம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயராஜ். அவரது மகள் நாகை வடகுடியில் உள்ள தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். கரோனா தொற்றை தடுக்கும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தபட்டதால் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் சில தளர்வுகளின்படி, ஆன்லைனில் வகுப்புகள் மற்றும் தேர்வுகளை நடத்த தமிழக அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. அடுத்த வாரம் ஆன்லைன் தேர்வு தொடங்கப்படவுள்ள நிலையில், பள்ளி நிர்வாகம் இதுவரை கல்வி கட்டணம் மீதம் வைத்துள்ள மாணவர்கள், முழுமையாக கல்வி கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே, ஆன்லைன் தேர்வில் பங்கேற்க முடியும் என்று பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அளித்தது.
இதனை தனது தந்தையின் செல்போனில் பார்த்த மாணவி இனி நம்மால் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ளமுடியாது, தேர்வு எழுதமுடியாது என மன விரக்தியில் மனமுடைந்து, வீட்டின் அறையில் தாயின் புடவையை கொண்டு தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பள்ளி சிறுமியை காப்பாற்றி நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெருத்த கலக்கத்தை உண்டாக்கியிருக்கிறது.