விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் உள்ள பேருந்து நிறுத்தும் மோட்டல்களில், உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் மரு. சுகந்தன் தலைமையில் விக்கிரவாண்டி உணவு பாதுகாப்பு அலுவலர் N. இளங்கோவன், கோலியனூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பு பழனி, திருநாவலூர் உருந்தூர்பேட்டை உணவுக் பாதுகாப்பு அலுவலர் எஸ். கதிரவன் ஆகியோர் கொண்ட குழு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில் ஹோட்டல் அரிஸ்டோ, ஹோட்டல் ஹில்டா, ஹோட்டல் ஜே.ஜே. கிளாசிக், ஹோட்டல் அண்ணா, ஹோட்டல் உதயா, ஹோட்டல் ஜே கிளாசிக் மோட்டல்கள் உள்ளிட்ட கடைகளில் தீவிர சோதனை நடத்தினர். இந்த ஆய்வின்போது பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி இல்லாத உணவு பொருட்கள் சுமார் 20 கிலோ, செயற்கை நிறமூட்டிய கார வகைகள் சுமார் 8 கிலோ, நாள்பட்ட இட்லி மாவு மற்றும் பரோட்டா 40 கிலோ, அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் 12 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
ஆறு நெடுஞ்சாலை உணவகங்களுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும், அனைத்து நெடுஞ்சாலை உணவகங்களிலும் வாட்ஸ் அப் புகார் எண் ஒட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஏதேனும் புகார் இருப்பின் 9444042322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். நெடுஞ்சாலை உணவகங்கள் உணவு பாதுகாப்பு துறையின் தொடர் கண்காணிப்பில் உள்ளது.