Skip to main content

பழைய கொள்ளிடப்பாலத்தில் திடீர் விரிசல் - போக்குவரத்து நிறுத்தம் ! 

Published on 16/08/2018 | Edited on 16/08/2018
k

 

காவிரியில் இந்த வருடம் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்துக்கொண்டே வருவதால் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு காவிரியில் தண்ணீர் கரையை தொட்டுக்கொண்டே ஓடுகிறது. காவிரியில் குளிக்க சென்ற இளைஞர்கள் 6 பேர் இதுவரை இறந்திருக்கிறார்கள். இதனால் காவிரி, கொள்ளிடம் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள் என்றும் எச்சரிக்கையுடன் இருங்கள் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தொடர்ந்து எச்சரிக்கை அறிவிப்பு கொடுத்துக்கொண்டு இருக்கிறார். காவிரி, கொள்ளிட கரையோரங்களில் குளிப்பதற்கும் தடை விதித்து இருக்கிறார்கள். போலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. காவிரியில் தண்ணீர் அதிகமாக செல்வதால் அதை சமாளிப்பதற்கு கொள்ளிடத்திலும் தண்ணீர் திறந்து விடப்பட்டு அங்கேயும் சமீப நாட்களாக தொடர்ச்சியாக தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் ஸ்ரீரங்கம் – சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியை இணைக்கு பழைய கொள்ளிட பாலத்தில் திடீர் விரிசலால் போக்குவரத்தை நிறுத்தியிருக்கிறார்கள். 

 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளிடம்புதிய பாலம் கட்டப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. புதிய பாலத்தில் தான் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. பழைய பாலத்தில் டூவிலர்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

 

இந்த நிலையில் கொள்ளிடம் பழைய பாலம் 1924 ல் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பழமையான பாலம் இந்த பாலத்தில் மொத்தம் 23 தூண்கள் உள்ளன. இந்தநிலையில் செக்போஸ்ட் அருகில் இருந்து 6-வது தூணில் திடீரென சிறிய விரிசல் ஏற்பட்டது. தூணில் சிமெண்டு பூச்சு குறிப்பிட்ட உயரத்திற்கு வரை பெயர்ந்து இருந்தது. இதனைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஸ்ரீரங்கம் போலீசார் விரைந்து வந்தனர். பாலத்தின் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைத்து போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தினர். பொதுமக்கள் யாரும் பாலத்தை கடந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை.

 

புதிய பாலம் வழியாகவே அனைத்து வாகனங்களும் சென்று வந்தன. ஸ்ரீரங்கம் பகுதியில் இருந்து நெ.1 டோல்கேட், உத்தமர்சீலி உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சார வினியோகம் இருந்து வருகிறது. பாலத்தின் தூணில் ஏற்பட்ட விரிசல் ஆபத்தாக கூடும் என கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்பட்டது. மாற்று ஏற்பாடாக சமயபுரம் பகுதியில் இருந்து நெ.1 டோல்கேட்டிற்கு மின்சார வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பழைய பாலம் என்பதாலும், நீரோட்டத்தின் காரணமாகவும் தூணில் உறுதித்தன்மை இழந்து விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என கருதினர். தூண் இடிந்து விழுந்தால் பாலத்திற்கு ஆபத்து ஏற்படலாம் என கருதி தொடர்ந்து அங்கிருந்து அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்