திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் கடந்த 2021 ம் ஆண்டு இணைய வழியில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 11 ஆம் வகுப்பு பயிலும் 68 மாணாக்கர்கள் துபாய் நகரத்திற்கு கல்விச் சுற்றுலா மற்றும் ஷார்ஜாவில் நடைபெறும் பன்னாட்டு புத்தக திருவிழாவிற்கும் அழைத்து செல்லப்படுகின்றனர். இதற்கான வழி அனுப்பும் விழா திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களை வாழ்த்தி பேசுகையில், "மாணவர்கள் தங்கள் பயணம் குறித்த நினைவுகளைக் கட்டுரையாக எழுத வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், தமிழகம் கல்வியில் சிறந்த மாநிலமாக உருவாக்க தேவையான அனைத்து முன்னெடுப்புகளையும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மேற்கொண்டு வருகிறோம். பள்ளிப்படிப்பு மட்டுமே படிப்பாகாது. வாழ்க்கை பாடத்தையும் மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார். அத்துடன் மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா குறித்த தங்கள் கட்டுரைகளை எழுத குறிப்பேடுகளையும் வழங்கினார்.
தங்களது வெளிநாட்டுப் பயணம் குறித்து மாணவிகள் மகிழ்ச்சியுடன் பேசுகையில், "நாங்கள் அனைவரும் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் . பெரும்பாலும் நாங்கள் அனைவரும் கூலித் தொழிலாளிகளின் குழந்தைகள் தான். கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லும் தமிழக அரசுக்கு எங்களது மனமார்ந்த நன்றி. இதுவரை விண்ணில் பறந்த விமானங்களை மண்ணிலிருந்து பார்த்த நாங்கள் விமானத்தில் பயணிக்க இருப்பது தங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிப்பதாக” தெரிவித்தனர்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழைக் குழந்தைகளை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லும் தமிழக அரசுக்குப் பெற்றோர்கள் தங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர் . நாளை காலை திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய் செல்லும் மாணவர்கள் அங்கு நான்கு நாட்கள் சுற்றுலா மேற்கொள்கின்றனர். இவர்களுடன் 5 தலைமை ஆசிரியர்கள் மற்றும் இரு பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர்கள், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பயணிக்கின்றனர்.