நாமக்கல் அருகே, மது குடிக்க பணம் கேட்டு தராததால் ஆத்திரம் அடைந்த கணவன், மீன் இறைச்சி வெட்டும் கத்தியால் மனைவியை சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தைச் சேர்ந்தவர் செல்லப்பன் (49). இவருடைய மனைவி செல்வி (45). இவர்கள் இருவரும் உள்ளூரில் சொந்தமாக மீன் இறைச்சிக்கடை நடத்தி வருகின்றனர்.
செல்லப்பன், மது போதைக்கு அடிமையாகி விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக மீன் இறைச்சிக் கடையை அவர் சரியாக கவனிக்காமல் இருந்ததோடு, தினமும் மது போதையில் வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். ஏப். 9ம் தேதி செல்வி, வழக்கம்போல் மீன் இறைச்சிக் கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். மதியம், குடிபோதையில் அங்கு வந்த செல்லப்பன், அவரிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். செல்வி, பணம் தர மறுத்துள்ளார்.
இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த செல்லப்பன், மீன் வெட்டும் கத்தியை எடுத்து மனைவியை முகம், மார்பு பகுதிகளில் கண்மண் தெரியாமல் வெட்டினார். இதில், பலத்த காயம் அடைந்த செல்வி, ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். இதைப் பார்த்ததும் செல்லப்பன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அங்கிருந்தவர்கள் செல்வியை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து சேந்தமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய செல்லப்பனை தேடி வருகின்றனர்.