தமிழ்நாடு குடிநீர் வழங்கல் துறை சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து திருச்சி மாவட்டத்திற்கு குடிநீர் எடுத்து செல்ல பூமிக்கு அடியில் இரும்பு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மார்ச் 6ஆம் தேதி காலை 11 மணியளவில் மணப்பாறை பெரியமணிப்பட்டி கிராமத்தில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றுவந்தது. இதில், உத்திரபிரதேச மாநிலம் குஷி மாவட்டம், தேஷ்வாலியா கிராமத்தை சோ்ந்த பிகேஷ் சவுகான்(23) என்பவர் வேலை செய்துகொண்டிருந்தார். அபோது அவர் எதிர்பாராதவிதமாக பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டு வந்த இரும்பு குழாயின் மீது தவறி விழுந்தார். அதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவருடைய அண்ணன் கவுதம் சவுகான் மணப்பாறை காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.