!['' No officer can transfer me from here '' - Police Inspector avoiding relocation!](http://image.nakkheeran.in/cdn/farfuture/a7mrgJ9hc_t7NMm4kdu3REoL8x_4v-ICZIC8GaV2XXY/1622391058/sites/default/files/inline-images/ins_1.jpg)
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், அரசு அதிகாரிகளின் பணியிட மாற்றம் அதிக அளவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்பொழுது கரோனா நோய் தொற்று தற்போது புதிய அரசுக்கு சவாலாக உள்ளதால், பெரிய அளவில் அதிகாரிகள் மாற்றம் என்பது நடைபெறாமல் நோய்த் தடுப்பு பணிகள் மட்டும் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருச்சி மாநகரை பொறுத்தவரை குறிப்பாக காவல் துறையில் பெரிய அளவில் மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அதிகாரிகள் மத்தியில் அதிலும் தமிழக குற்றப்புலனாய்வு தனிப்பிரிவு அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
அதற்கு காரணம் தமிழக குற்றப்புலனாய்வு தனிப்பிரிவு ஆய்வாளராக நீண்டகாலமாக திருச்சி மாநகரில் பணியாற்றும் கணிதமேதை பெயர்கொண்ட அதிகாரி ஒருவர், அதிமுக ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளும் மிக வலுவான அளவில் எந்தெந்த வழிகளில் எல்லாம் பணம் சம்பாதிக்க முடியுமோ முடிந்தவரை சம்பாதித்து சேர்த்து வைத்துள்ளார்.
அந்த ஆய்வாளர் திருச்சி மாநகரில் இருந்து மாற்றப்படுவதற்கு பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றும், அவ்வப்போது உயர் அதிகாரிகளின் முன்னிலையில் ''நான் ஒரு இருதய நோயாளி சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டிருக்கிறேன்'' என்று தன்னுடைய உடல்நிலையை மட்டும் அதிகாரிகளுக்கு முன்பாக காமித்து இந்த பணியிட மாற்றங்களை தவிர்த்து திருச்சி மாநகரில் முழுமையாக டேரா போட்டு இருக்கிறார்.
அதிகாரிகளுக்கு முன்பு அடித்துக்கொள்ளும் அந்த ஆய்வாளர் வெளியே வந்தவுடன் மற்ற காவலர்களிடம் நான் இருக்கும் வரை எந்த அதிகாரியும் இங்கு வரப் போவதில்லை என்று மற்ற காவலர்களிடம் பேசிக் கொள்கிறார்.
எனவே தற்போது காவல்துறையில், குறிப்பாக குற்றப்புலனாய்வு தனிப்பிரிவில் மாற்றம் ஏற்பட்டால் திருச்சி மாநகரில் பணியாற்றும் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் என அனைவரையும் கூண்டோடு பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்று காவல்துறை வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றனர்.
குறிப்பாக ''நுண்ணறிவுப் பிரிவின் டிஜிபியாக இருக்கும் தேவாசீர்வாதம் அவர்களிடம் நான் பேசிவிட்டேன் என்னை எந்த அதிகாரியும் இங்கிருந்து மாற்ற முடியாது'' என்றும் அவர் தொடர்ந்து மார்தட்டி வருவதால் இந்த குற்றப்புலனாய்வு தனிப்பிரிவு கூட்டத்தை கூண்டோடு மாற்றினால் மட்டுமே திருச்சி மாநகர காவல் துறைக்கு விடிவு காலம் பிறக்கும் என்று கூறுகின்றனர்.
எனவே தமிழக முதல்வரும், ஏடிஜிபி தேவாசீர்வாதமும் இதற்கான நடவடிக்கை எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பில் திருச்சி காவலர்கள் உள்ளனர்.