
சென்னை எழும்பூர் காவல் ஆணையர் அலுவலகத்தில் பழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க பெண் காவலர் பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம்போல பணி முடிந்து தனது வீட்டிற்குச் செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயில் மூலம் பழவந்தாங்கல் செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் ரயில் நிலைய நடைமேடையில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென பெண் காவலரின் கழுத்தில் இருந்த ஒன்றரை பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டதுடன் பாலியல் தொல்லைக் கொடுக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் காவலர் கூச்சலிட்டுள்ளார். இதனைக் கண்ட அங்கிருந்த மற்ற ரயில் பயணிகள் அந்த மர்ம நபரைத் துரத்தி பிடித்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மாம்பழம் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சிட்லபாக்கம் பகுதியைச் சேர்ந்த சத்திய பாலு என்பது தெரியவந்தது.
மேலும் இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையதும் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சத்யபாலு மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். ரயில் நிலையத்தில் நடைமேடையில் பெண் காவலருக்கு கீழே தள்ளி பாலியல் துன்புறுத்தல் அளித்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த சத்திய பாலுவை சிலர் தோளில் தூக்கிச் சென்ற காட்சிகளும் வெளியாகியுள்ளன.