சிதம்பரத்தில் கடலூர் தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளரின் குடும்ப நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது, “அதிமுக உடன் இனி எப்போதும் கூட்டணி கிடையாது. பத்தாண்டுகள் அதிமுகவை வாழ வைத்தோம். இனி நாங்கள் வாழ்வோம். எங்களின் கேப்டன் கடந்த 40 ஆண்டுகளாக பொதுமக்களுக்கும் தொண்டர்களுக்கும் சேவைசெய்து வருகிறார். நாங்கள் குடும்பத்துடன் உழைக்க வந்துள்ளோம், பிழைக்க வரவில்லை.
எனவே தொண்டர்கள் எங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆரம்பம் முதல் அப்பாவின் முதல் ரசிகனாக உள்ளேன். இந்த மக்களுக்கும் தொண்டர்களுக்கும் நல்லது செய்வதுதான் எனது நோக்கம். அன்புடன் பொறுமை காத்திருந்தோம் ஆனால், எங்களுக்கான உரிமை கிடைக்காத நிலையில் வெடித்துள்ளோம். நாங்கள் அதிமுகவின் அடிமை இல்லை, அதிமுக தொண்டர்கள் இடத்தில் எங்களுக்குப் பிரச்சினை இல்லை. ஆனால், தலைமைக்கும் எங்களுக்கும்தான் பிரச்சனை.
ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கமெண்ட் போடுவது அரசியல் அல்ல. களத்தில் இறங்கி சத்ரியன் சாணக்கியனாகவும், சாணக்கியன் சத்திரியனாகவும் செயல்படுவதே அரசியல். தனித்துப் போட்டியிட்டு அதிமுகவை வீழ்த்துவதே தேமுதிகவின் குறிக்கோள். அதிமுகவை வீழ்த்துவோம் என்று நாம் விழுந்துவிடக் கூடாது விழிப்புடன் அனைவரும் செயல்பட வேண்டும்” எனப் பேசினார். இவருடன் பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏ சிவக்கொழுந்து, கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் உமாநாத், மாவட்டத் துணைச் செயலாளர் பானுசந்தர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.