
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்னபள்ளிகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் மத்திய குற்றப்புலானய்வு துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் நிலையில், கடந்த 7ஆம் தேதி, இவரது வீட்டின் பூட்டை உடைத்து, வீட்டில் வைத்திருந்த 10 சவரன் தங்கநகை மற்றும் 2 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
அதே போல் அதே தேதியில், அயித்தம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட கட்டவாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சண்முகம் என்பவரது வீட்டில் மிளகாய் பொடி தூவி 5 சவரன் தங்க நகை, 3 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து உமராபாத் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வந்த நிலையில், இக்கொள்ளைச் சம்பவத்தில், ஈடுப்பட்ட கொள்ளையர்களை பிடிக்க திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயாகுப்தா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, மத்திய குற்றப்புலானய்வு துறை துணைகாவல் கண்காணிப்பாளர் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்களை தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடிவந்தனர்.
இந்த நிலையில், சின்னபள்ளிகுப்பம் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரை தனிப்படை காவல்துறையினர் பிடித்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, சங்கர் என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த சாந்தி என்பவருடன் சேர்ந்து இரண்டு வீட்டிலும் கொள்ளையடிக்க திட்டம் தீட்டி, திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன், முத்துக்குமார், ஆகியோரை வரவழைத்து, கடந்த 7ஆம் தேதி 5 பேரும் சேர்ந்து முகமூடி அணிந்து மத்திய குற்றப்புலானய்வு துறை துணைகாவல் கண்காணிப்பாளர் வீட்டில், 10 சவரன் தங்க நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தையும், அதே போல் கட்டவரப்பள்ளி பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரது வீட்டில், 5 சவரன் தங்கநகை மற்றும், 3 லட்சம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்தது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த சாந்தி, ஹிரி கிருஷ்ணன், முத்துக்குமார், பிரபாகரன், ஆகியோரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து உமராபாத் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, 5 பேர் மீது உமராபாத் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர். மேலும் மத்திய குற்றப்பிரிவு புலனாய்வு துணை துணைகாவல் கண்காணிப்பாளர் வீட்டிலேயே தங்க நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.