
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் கடந்த ஆண்டு தீபாவளியன்று(அக்டோபர் 31) வெளியான படம் அமரன். இந்தப் படம் வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியிருந்த நிலையில் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். அவரது மனைவியாக சாய் பல்லவி நடித்திருந்தார். ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் நூறாவது நாள் கொண்டாட்ட நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் தவிர்த்து படத்தின் வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு கமல் கேடயம் வழங்கி கௌரவித்தார். பின்பு சிவகார்த்தியேன் மேடையில் பேசும் போது படம் தொடர்பாக நிறைய நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டார். அப்போது சாய் பல்லவி குறித்து பேசிய அவர், “இந்த படத்துல நான் ஸ்கோர் பன்றனா இல்ல, நீங்க ஸ்கோர் பன்றீங்களா என ஒரு பிரேமில் கூட நான் பார்த்ததில்ல. ஏன்னா, நீங்க ஸ்கோர் பண்ணாலுமே என் ஹீரோயின் ஸ்கோர் பன்றாங்கன்னு தான் பார்ப்பேன். படம் ஜெயிச்சா தான் எல்லாமே.
எனக்கு கிடைச்ச பெரிய பாராட்டு என்னவென்றால், குஷ்பு படம் பார்த்துட்டு ஃபோன் பண்ணி உங்க பீக் சினிமா எது தெரியுமா சிவா, நீங்க இல்லாம 10 நிமிஷம் கதையை ஹீரோயின் எடுத்துட்டு போறதுக்கு அனுமதிச்சீங்கள்ல, அதுதான்னு சொன்னாங்க. அதுக்கு நான், அவங்களுக்கு அனுமதிக்கலாம் இல்ல, அவங்க என் ஹீரோயின், நான் இல்லன்னாலும், அவங்க பெர்ஃபாமன்ஸ் பண்ணும் போது நான் அங்க இருக்கறதா தான் உணர்றேன்னு சொன்னேன். சாய் பல்லவி நிறைய பேட்டிகள்ல அவரோட சீன்ஸ் எல்லாம் அப்படியே வருமானு டைரக்டர் கிட்ட கேட்டதா சொல்லியிருந்தாங்க. அப்படியே வரும், அந்த மாதிரி அனுமதிக்கிற ஹீரோஸ்களும் இங்க இருக்காங்க. கமல் சார் படங்களும் பார்த்து நாங்க வளர்ந்தவங்க” என்றார்.