
வேலூர் கோட்டை மைதானத்தில் அ.தி.மு.க இளைஞர் இளம்பெண்கள் பாசறை 2026 இலட்சிய மாநாடு வேலூர் மண்டல மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அ.தி.மு.க பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “மத்தியிலே இருக்கக்கூடிய அரசாங்கம் புதிய தேசிய கல்விக் கொள்கையை கடைப்பிடித்தால் தான் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நிதி வழங்கப்படும் என்று சொல்வது சரியல்ல. மத்திய அரசாங்கம் முன்மொழி கொள்கையை ஏற்கச் சொல்லி நிர்பந்தப்படுத்துவது சரியல்ல. அண்ணாவும், எம்ஜிஆரும் இரு மொழி கொள்கையை கடைப்பிடித்தார்களோ அதையேதான் இப்போது அ.தி.மு.க.வும் கடைபிடிக்கும்.
தமிழகத்தை பொறுத்தவரை இரு மொழி கொள்கையை தான் அ.தி.மு.க கடைபிடிக்கும். அதில் எந்த மாற்றமும் கிடையாது. 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க மிகப்பெரிய கூட்டணி அமைத்து 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். மத்திய அரசு, தி.மு.க அரசை பார்க்காமல் கல்வி பாதிக்காமல் இருப்பதற்காக உடனடியாக நிதியை வழங்க வேண்டும். அதேபோல 100 நாள் வேலைக் திட்ட பணியாளர்களுக்கும் போதிய நிதியினை உடனடியாக வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் ஏழையின் மக்கள் தான் பணி செய்கிறார்கள். எனவே அவர்களின் நலன் கருதி மத்திய அரசு நிதியினை உடனடியாக வழங்க வேண்டும். தமிழகத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் மூலம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி கூடுதலான வருமானம் வருகிறது. அப்படி வரும் பொழுது தமிழக அரசு எதற்கு கடன் வாங்க வேண்டும், நான்கு ஆண்டுகளில் மூன்று லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளனர் யாருக்காக வாங்கினார்கள்? தமிழகத்தில் எந்த ஒரு மிகப்பெரிய திட்டம் கொண்டுவரப்படவில்லை. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளது. தீய சக்தி தி.மு.கவை விரைவில் வீட்டிற்கு அனுப்பப்படும்.
பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் ஒன்றாக அறிக்கை விடுகிறார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். தி.மு.க தான் பாஜகவுடன் காங்கிரஸ் கட்சியுடன் மாறி மாறி கூட்டணி வைத்தது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தன்னை அப்பா என்று கூறுவதாக சொல்கிறார். பாலியல் துன்பங்களுக்கு ஆளாக்கப்படும் பெண்கள், அப்பா அப்பா என கதறும் போது அப்பொழுது கேட்கவில்லையா? தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது கோ பேக் மோடி என்று கூறியது, ஆளுங்கட்சியாக வரும்பொழுது வெல்கம் மோடி என்று கூறுகிறார்கள். தி.மு.கவிற்கு எந்த கொள்கையும் இல்லை. ஆனால், அ.தி.மு.க.வுக்கு கொள்கை, வேறு கூட்டணி வேறு. வரும் சட்டமன்ற தேர்தலில் வலிமையான கூட்டணி வைத்து வெற்றி பெறுவோம். 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றி பெறும். மத்திய அரசு நிதி வழங்கவில்லை வழங்கவில்லை என தி.மு.க அரசு கூறுகிறது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியினை எம்பிக்கள் மூலம் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்து பெறவேண்டியது தானே?
திமுக ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் 15%சதவீதம் மின் கட்டணம் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் சொத்து வரி கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகள் அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரித்து காணப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 141 கொலைகள் நடந்துள்ளது. தி.மு.க ஆட்சியில் தமிழகம் போராட்டம் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது. தமிழகத்தில் 5 லட்சம் அரசு ஊழியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. எப்போது நிரப்ப போகிறது திமுக அரசு” என்று காட்டமாக பேசினார்.