Published on 12/07/2018 | Edited on 12/07/2018

டி.டி.வி. தினகரன் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். சங்கரன் கோவில் தேரடித் திடலில் ஆதரவாளர்கள் முன்பு பேசிய அவர், அமமுக உருவாக்கப்பட்டது அஇஅதிமுகவையும், இரட்டை இலையையும் மீட்டெடுக்கவும்தான். நான் ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றதுபோல, எப்போது தேர்தல் வந்தாலும் அதனை சந்தித்து வெற்றி பெறுவோம். இரட்டை இலையை மீட்டெடுப்போம்.
இரட்டை இலை இன்றைக்கு துரோகிகளின் கையில் சிக்கிக் கொண்டிருப்பதால் அதை மீட்டெடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இன்றைக்கு தமிழகத்தில் நிலவிக் கொண்டிருப்பது மக்கள் விரோத ஆட்சி. இது மக்கள் விரும்பாத ஆட்சி என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த ஆட்சியை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவோம் என்ற உறுதியை தருகிறேன் என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக, பாஜக ஆகிய கட்சிகள் அமமுக கொள்கைகளுக்கு முரண்பாடான கொள்கைகளைக் கொண்டவை என்பதால், இக்கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்க முடியாது. அமமுக தலைமையை ஏற்றுக்கொள்ளும் மதச்சார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்றார்.