சென்னை மெரினா கடற்கரையில் 45 அடி உயரத்தில் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ரேடார் கருவிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம் சுமார் 150 கி.மீ. தொலைவு சுற்றளவில் கடலில் வரும் கப்பல்கள் மற்றும் படகுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் தான் இந்த ரேடார் கருவி கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென பழுதானது.
அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் குழுவினர் இந்த ரேடாரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் இதில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய முடியவில்லை. இதனால் கடற்கரைக்கு வரும் படகுகள் மற்றும் கப்பல்கள் குறித்த தகவல்களைப் பெறுவதில் சிரமம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பெங்களூருவில் இருந்து சென்னை மெரினா கடற்கரைக்கு புதிய ரேடார் கருவி கொண்டுவரப்பட்டது. அதன்படி கலங்கரை விளக்கத்தில், 60 அடி உயரம் கொண்ட கிரேன் எந்திரம் மூலம் புதிய ரேடார் கருவி பொருத்தப்பட்டது.
இந்த ரேடார் கருவி மூலம் ஸ்கேன் செய்யும் பணிகளையும், அதில் உள்ள கேமரா புகைப்படம் எடுக்கும் பணியையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ரேடார் கடலோர பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே ரேடாரின் ஸ்கேன் விவரங்கள் மற்றும் புகைப்படங்களை, கலங்கரை விளக்க அதிகாரிகள் உடனுக்குடன் கடலோர காவல்படைக்கு அனுப்பி வருகின்றனர். இந்த ரேடார் கருவி கலங்கரை விளக்கத்தின் 11வது மாடியில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.