
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் பகுதியில் பெரிய ஏரி ஒன்று உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக இந்த ஏரியில் முழு அளவு தண்ணீர் நிரம்பி கடல் போல் நிற்கிறது. இந்த ஏரி கரையோரம் பெரிய ஆலமரம் ஒன்றும் உள்ளது. இந்த ஆலமரத்தின் அருகில் ஏரி தண்ணீரில் ஒரு குழந்தையும், ஒரு பெண் உடலும் அழுகிய நிலையில் சடலமாக மிகுந்துள்ளன.
ஏரிக்கரை பகுதிக்கு ஆடு மாடு மேய்க்க சென்றவர்கள் இதை பார்த்துவிட்டு உடனடியாக வளத்தி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் ஏரியில் மிதந்த தாய், குழந்தை இருவரது சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்த பெண் அதே பகுதியில் உள்ள செக்கடி குப்பம் என்ற கிராமத்தைச் சேர்ந்த மலர்க்கொடி(32) என்பதும், இவர் மனநலம் பாதிக்கப்பட்டு பல இடங்களில் சுற்றித் திரிந்த போது, சமூக விரோதிகளால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அதன் மூலம் கர்ப்பிணியான இவருக்கு செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
கணவனை இழந்த இவருக்கு ஏற்கனவே 11 வயதில் ஒரு பெண் பிள்ளை இருக்கிறது. கடந்த 4 நாட்களுக்கு முன் மேல்மலையனூர் பகுதிக்கு இவர் வந்துள்ளார். அப்போது இவர் குழந்தையுடன் ஏரியில் தவறி விழுந்து இறந்திருக்கலாம், அந்த சமயத்தில்தான் அவர் வயிற்றிலிருந்து குழந்தை பிறந்து இறந்துள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து போலீசார் மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.