
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகில் உள்ளது வீ. பாளையம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 40). இவரது மனைவி செல்வி (வயது 35). இருவரும் தினசரி கரும்பு வெட்டும் கூலி வேலைக்குச் சென்று வருபவர்கள். கடந்த 17ஆம் தேதி உடல் அசதியைப் போக்க சுப்பிரமணியன் மது வாங்கி வந்து தனது வீட்டு மாடியில் அமர்ந்து மது அருந்திவிட்டு பாட்டிலில் மீதம் இருந்த மதுவைப் பிறகு குடிக்கலாம் என அங்கேயே வைத்துவிட்டு வீட்டிற்குச் சென்று படுத்துக் கொண்டார். மறுநாள் காலை எழுந்ததும் இரவு மீதம் வைத்திருந்த மதுவை எடுத்துக் குடித்துள்ளார். அப்போது மது வாடைக்கு பதிலாக மண்ணெண்ணெய் வாடை அடித்துள்ளது. இதுகுறித்து தனது மகளிடம் மது வாடைக்குப் பதிலாக மண்ணெண்ணெய் வாடை அடிப்பது ஏன் எனக் கேட்டுள்ளார். அவரது மகள் இது குறித்துத் தமக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.
இருந்தும் மதுவை எடுத்துக் குடித்த சுப்பிரமணியன் அப்படியே புறப்பட்டு கரும்பு வெட்டும் கூலி வேலைக்குச் சென்றுவிட்டார். அங்கு வேலை செய்து கொண்டிருந்தபோது அவருக்கு உடல்நிலை சரி இல்லாமல் இருந்துள்ளது. அதன் காரணமாக அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். வீட்டுக்கு வந்த பிறகும் வாந்தி எடுத்துள்ளார். சந்தேகம் இருந்ததால் அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் உயிரிழந்தார்.
இதுகுறித்து சுப்பிரமணியன் தங்கை இந்திரா தியாகதுருகம் போலீஸில் தனது சகோதரரின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகப் புகார் செய்துள்ளார். இவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் சுப்பிரமணியன் மனைவி செல்வியை போலீசார் விசாரணை செய்ததில் அவர் சுப்பிரமணியனை கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசாரிடம் செல்வி அளித்த வாக்குமூலத்தில், ''எனது கணவரும் நானும் தினசரி கரும்பு வெட்டும் வேலைக்குச் சென்று வருவோம். இந்த நிலையில் எனது கணவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ஜெயமுருகன் என்பவரையும் என்னையும் தொடர்புபடுத்தி பேசினார். இதனால் கோபமடைந்த நான் உண்மையாகவே ஜெயமுருகனுடன் பழக ஆரம்பித்தேன். நானும் ஜெயமுருகனும் எனது கணவர் இல்லாத நேரத்தில் தனிமையில் நெருக்கமாக இருப்போம். இப்படிப்பட்ட எங்களின் தொடர்பு எனது கணவருக்குத் தெரிய வந்ததால் என்னை மேலும் அடித்துத் துன்புறுத்த ஆரம்பித்தார். இதனால் எங்கள் தொடர்புக்கு இடையூறாக இருந்த எனது கணவரை நானும் ஜெயமுருகனும் தீர்த்துக்கட்ட சந்தர்ப்பம் எதிர்பார்த்து இருந்தோம்.
சம்பவத்தன்று எனது கணவர் இரவு சாப்பிட்டுவிட்டு மொட்டை மாடிக்குப் படுக்கச் சென்றார். அப்போது அவர் மது குடித்து விட்டு அதில் பாதி மது பாட்டிலில் வைத்திருந்ததை நான் பார்த்தேன். அந்த மது பாட்டிலில் பூச்சி மருந்து கலந்து வைத்துவிட்டால் அந்த மதுவை எப்படியும் அவர் எடுத்துக் குடிப்பார் அதன்மூலம் அவரை சாகடிக்க முடிவு செய்தேன். இதை ஜெயமுருகனிடம் கூறினேன். அவர் உடனடியாகச் சென்று எங்கிருந்தோ பூச்சி மருந்து வாங்கி வந்து கொடுத்தார். அதை யாரும் சந்தேகம் அடையாத வகையில் மது பாட்டிலில் கலந்து வைத்து விட்டேன். நான் எதிர்பார்த்தது போலவே மறுநாள் அந்த மதுவை எனது கணவர் எடுத்துக் குடித்து விட்டார். அதன் காரணமாக அவர் இறந்து விட்டார். இதுகுறித்து யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் வராமல் இருக்க நான் கணவரை இழந்தது குறித்து உறவினர்கள் முன்னிலையில் அழுது நாடகமாடினேன்'' என்று வாக்குமூலம் அளித்துள்ளார் செல்வி.
இதனையடுத்து செல்வி மற்றும் அவருடன் தவறான தொடர்பில் இருந்த ஜெயமுருகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.