![Nagoor Darga office](http://image.nakkheeran.in/cdn/farfuture/XVlPl3T4u8Yjs3SEvKlM9rRIR_Xm2dzbEM6UswJjAzU/1674628027/sites/default/files/inline-images/th_3632.jpg)
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், வாஞ்சூரில் அமைந்துள்ள தர்காவானது, நாகூர் ஆண்டவர் 40 நாட்கள் தவம் இருந்ததால் பழமை வாய்ந்த தர்காவாக விளங்கி வருகிறது. நேற்று கொடியேற்றத்துடன் துவங்க இருந்த விழாவுக்கு உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவிலிருந்து கொடி ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று மாலை நாகூர் தர்கா அலங்கார வாசலிலிருந்து கொடி ஊர்வலம் துவங்குவதற்கான கொடியுடன் கப்பல் வடிவ ரதம் தயாராக இருந்தது.
இந்த நிலையில் கொடி ஊர்வலத்தை துவங்கி வைப்பது யார் என்று நாகூர் தர்கா நிர்வாகிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் நாகூர் தர்கா முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு நாகை வட்டாட்சியர் ராஜசேகர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கொடி எடுத்துச் செல்லும் ரதத்தை காவல்துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பக்தர்கள் கொடியை தலையில் சுமந்தபடி சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றனர். தமிழக காவல்துறை வாகனங்கள் அணிவகுத்து வர கொடியை தலையில் சுமந்து வந்த இஸ்லாமியர்களை புதுச்சேரி மாநில போலீசார் அவர்கள் எல்லையில் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு இரு மாநில போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு கொடி வாஞ்சூர் தர்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு வழக்கமான கம்பத்தில் இல்லாமல் தனி கம்பம் நடப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.
நாகூர் தர்கா நிர்வாகத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக பக்தர்களே ஆண்டவர் கொடியை சுமந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.