
தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுதல், மீனவர்களது படகுகளைச் சிறைபிடிப்பது, மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் இலங்கை கடற்படையை கண்டித்தும், இதற்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் திமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “இதுவரை 97 மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆண்டில் இன்று வரை 77 பேர் சிறையில் உள்ளனர். ஒரு நாளைக்கு இரண்டு பேர் என்ற சதவீதத்திலே கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதற்கு ஒன்றிய அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது?. ஒவ்வொரு முறையும் இந்த பிரச்சனையை நாடாளுமன்றத்தை எழுப்பும்போது மத்திய அரசு சார்பில் எந்த பதிலும் சொல்லப்படுவதில்லை. எந்த அக்கறையும் காட்டப்படுவதில்லை.
தொடர்ந்து தமிழக மீனவர்கள் வைக்கக்கூடிய கோரிக்கைகள், முதலமைச்சர் வைக்கக்கூடிய கோரிக்கைகள் என்னவென்றால், இரண்டு நாட்டு மீனவர்களுக்கிடையான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்பதுதான். ஆனால் எத்தனை முறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்கள். எனக்குத் தெரிந்து இதுவரை பேச்சுவார்த்தை நடந்தது கிடையாது. மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தான் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றது. அதற்குப் பிறகு தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட போது நான், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர், மீனவர் நலத்துறை அமைச்சர் ஆகியோர் டெல்லிக்கு சென்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தோம். அப்போது இதே கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினோம்.
அவரும் இந்த கூட்டத்தை நடத்துவேன் என்று சொன்னார். மறுபடியும் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்த பிறகு அதிகாரிகளுக்கு இடையேயான கூட்ட நடத்தப்பட்டிருக்கிறது. இது தவிர இதுவரைக்கும் மீனவர்களுக்கிடையான கூட்டம் நடைபெறவே இல்லை. ஆனால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு முறையும் பிரதமரை சந்திக்கும் போது மீனவர்கள் பிரச்சனையை எழுப்ப தவறுவது இல்லை என்பது தான் உண்மை. இது தொடர்பாக எத்தனை கடிதங்கள் எழுதியுள்ளார். பிரதமர் தமிழகத்திற்கு வரும் பொழுதும், முதல்வர் மு.க. ஸ்டாலின் டெல்லி செல்லும் போதும் தொடர்ந்து, மீனவர்கள் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தான் தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்க கூடிய கோரிக்கையாகும்” எனப் பேசினார்.