Skip to main content

சாத்தூர் வெடிவிபத்து; உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
mk stalin announces relief to families of Chatur crackers victims

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்ப்பட்டி பகுதியில் சகாதேவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. 20 அறைகள் கொண்ட இந்த ஆலையில், இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மூன்று அறைகள் இடிந்து தரைமட்டமான நிலையில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் தீயை அணைத்து மீட்புப் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். 

இந்த விபத்தில் அச்சங்குளத்தைச் சேர்ந்த ராஜ்குமார்(42), சூரங்குடியைச் சேர்ந்த மாரிச்சாமி(44), சந்திரப்பட்டியைச் சேர்ந்த செல்வக்குமார்(44), மோகன்(50) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பலர் விபத்தில் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பட்டாசுக்கு ரசாயன மூலப்பொருள் கலவை கலக்கும் பணி செய்து கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி முதல்வரின் பொதுநிவாரண நிதியில் இருந்து உயிரிழந்த 4 பேரின் குடும்பம்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும்” - இ.பி.எஸ். வலியுறுத்தல்!

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
Chief minister should resign EPS Emphasis

முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 5 பேர் சிகிச்சை பெற்றுவருவதாகச் செய்திகள் வந்த நிலையில், அதனைத் திருப்பூர் மாவட்ட காவல்துறை மறுத்து செய்தி வெளியிட்டது. ஆனால், தற்போது மாவடப்பு மலைக்கிராமத்தைச் சேர்ந்த இவர்கள் மதுவுடன் கள்ளச்சாராயம் கலந்து அருந்தியதால் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதிலும் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்க, அதிலிருந்து இந்த திமுக அரசு எந்த பாடமும் கற்றுக்கொள்ளாமல், மீண்டும் மீண்டும் மூடி மறைக்க முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஒவ்வொரு முறையும் கள்ளச்சாராய மரணங்கள் நிகழும் போது ‘இனி இதுபோல் நடக்காது’ என்று முதல்வர் சொல்வதும், மீண்டும் கள்ளச்சாராயத்தால் மக்கள் பாதிக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்ட நிலையில், இனியும் மு.க. ஸ்டாலின் முதல்வராகத் தொடர்வதில் எந்த தார்மீக அடிப்படையும் இல்லை. தமிழ்நாட்டில் நிலவும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் புழக்கத்திற்கும் இதனால் சீரழியும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் முழு பொறுப்பேற்று முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

கோடநாடு விவகாரம்; சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பதில்!

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
mk stalin said So far 268 witnesses have been examined in Kodanad case

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு தீர்மானங்கள், சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வருகிறது. அதன்படி மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா  சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பின்னர் சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “மக்களவை தேர்தலில் செய்கூலி, சேதாரம் இன்றி 40க்கு 40 வெற்றியை மக்கள் அளித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை ஆய்வு செய்தால் 221 தொகுதிகளிலும் திமுக வென்றுள்ளது. 2026இல் வெற்றிபெற்றுடுவோம் என்ற மமதையில் கூறவில்லை, மனசாட்சிப்படியே கூறுகிறேன். 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் மகத்தான வெற்றியைப் பெறுவோம். 

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் 24 மணி நேரத்தில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் பணியிட மாற்றம், காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சியினர் அரசின் நடவடிக்கைகள் போதவில்லை எனக்கூறுவது தோல்வியை மறைக்கும் முயற்சி. ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் கூட்டத்தில் பேசியபோது இனி கள்ளச்சாராயம் விற்கப்பட்டாலும் அல்லது அதனால் எந்தவித பாதிப்பு ஏற்பட்டாலும் அந்த மாவட்டத்தின் ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்தான் பொறுப்பு. அதனால் கடும் நடவடிக்கையை எடுங்கள் என்று கூறியிருக்கிறேன். 

கள்ளச்சாராயம் போன்றே போதைப் பொருள் விற்பனையை முற்றிலும் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதைப்பொருள் கடத்தல், விற்பனையில் ஈடுபட்டவர்களுடைய வங்கிக் கணக்குகளை முடக்கி, சொத்துகளைப் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படு வருகிறது. அரசு எதையும் மறைக்க வில்லை; முழுமையாக விசாரித்து வருகிறது.

கோடநாடு வழக்கில் இதுவரை 268 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருப்பவர்களிடம் இன்டர்போல் உதவியுடன் விசாரித்து வருகிறோம். தமிழ்நாடு சட்ட ஒழுங்கை காப்பதில் வெற்றிகரமாக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் காவல்துறைக்கான 190 அறிவிப்புகளில் 179 அறிவிப்புகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையில் பணியாற்றுபவர்களின் மன அழுத்தத்தைப் போக்க, பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

தமிழ்நாடு இன்று இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக உயர்ந்துவருகிறது. தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, உட்கட்டமைப்பு, மனித வளர்ச்சி குறியீடு என எல்லா வகையிலும் வளர்ச்சியடைந்துள்ளது.” என்றார்.