ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகள் மற்றும் புகார் உட்பட பல்வேறு கோரிக்கைகளைத் தெரிவித்து அதற்கான விளக்கங்களையும் கேட்டறிந்தனர்.
முன்னதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் எனத் தெரிவித்திருக்கும் சம்பவத்தைக் கண்டிக்கும் விதமாக விவசாயிகள் எழுந்து நின்றபடி தங்களது கண்டனங்களைத் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் தடுப்பணைக் கட்டும் செயலை ஆந்திர அரசு கைவிட வேண்டும் எனவும் இதற்குத் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து விவசாய குறைதீர்வு கூட்டத்தை முடித்து விட்டு வெளியே வந்த விவசாயிகள், ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையாக ஆந்திர மாநில முதல்வர் பாலாற்றில் தடுப்பணைக் கட்டும் ஏற்பாடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்தும் இதனை மாவட்ட ஆட்சியர் தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு சேர்க்க வேண்டுமெனவும் வேண்டுகோள் வைத்துள்ளனர். மேலும் தடுப்பணைக் கட்டப்படும் எனில் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்