கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் தனியார் உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தை ஆய்வு செய்து, சீல் வைத்தனர். மேலும், புகாரின் அடிப்படையில் கடையின் உரிமையாளர்களைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களுக்குச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் நேற்று இரவு சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரியிலுள்ள தனியார் உணவகத்தில் நேற்று இரவு 150 பேருக்கு சிக்கன் ரைஸ் வாங்கி செல்லப்பட்டது. அதைச் சாப்பிட்ட வடமாநிலத்தவர் 26 பேருக்கு உடல்நிலை பாதிப்பு வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை ஏற்பட்டதைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் அளவுக்கு வசதியில்லாத அந்தப் பெண் வீட்டில், “நீ வேலை பார்க்கும் நிறுவனத்தில் உன் சம்பளத்திலிருந்து இ.எஸ்.ஐ. பிடித்தம் செய்கிறார்களே? தீராத தலைவலிக்கு அங்கு போய் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே?” என்று கூற, அந்தப் பெண்ணோ “இன்று ஞாயிற்றுக்கிழமை டாக்டர்கள் வருகிறார்களோ இல்லையோ? விடுமுறை நாளோ? ஒன்றும் தெரியவில்லையே?” என்றிருக்கிறார். அந்த வீட்டில் நம்மைத் தொடர்பு கொண்டு இதுகுறித்துப் பேச, வலைத்தளத்தில் விபரம் தெரிந்துகொண்டு “இன்று மதியம் 1 மணி வரை இ.எஸ்.ஐ. மருத்துவமனை வேலை நேரம்” எனக் கூறினோம்.
அந்தப் பெண் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்குக் கிளம்பியபோது நம்மையும் அழைக்க, உடன் சென்றோம். நாம் சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்குச் சென்றபோது பகல் மணி 11.30. அங்கிருந்த தகவல் பலகையில் வெளிநோயாளிகள் பார்க்கும் நேரம் 8 மணி முதல் 12 மணி வரை எனப் போட்டிருந்தனர். ஆனால், எந்தப் பிரிவிலும் மருத்துவர் ஒருவர்கூட இல்லை. செவிலியர் ஒருவரிடம் ‘டாக்டர் எங்கே?’ எனக் கேட்டோம். “இப்போதுதான் ஓ.பி. பார்த்துட்டு கிளம்பினார்.” என்றார். ‘யாரிடம் புகார் தெரிவிப்பது?’ என்று கேட்டபோது, ‘புகார் எழுதுறதுன்னா.. ஒரு தாளில் எழுதி.. அங்கிருக்கும் புகார் பெட்டியில் போட்டுவிட்டுக் கிளம்புங்க..” என்று புகார் பெட்டி இருக்கும் இடத்தைக் கைகாட்டிவிட்டு, “டாக்டர் டீ குடிக்கப் போயிருக்கிறார். வெயிட் பண்ணுங்க. போன் பண்ணி வரச் சொல்லுறேன்.” என்றார் கூலாக.
நாம் இ.எஸ்.ஐ. மருத்துவக் கண்காணிப்பாளர் அசோக்கை தொடர்புகொண்டு இது குறித்துப் பேசினோம். “இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமைங்கிறதுனால ஓபில நோயாளிங்க எண்ணிக்கை குறைவாகத்தான் இருந்திருக்கும். யாராச்சும் ஒரு டியூட்டி டாக்டர் இருப்பாரே? டிஸ்பென்சரில கூட்டம் இருக்கும். ஆஸ்பத்திரிக்கு நோயாளிங்க ரொம்ப பேரு வரமாட்டாங்க. டாக்டர் அங்கேதான் இருப்பாரு. அங்கிட்டு எங்கேயாச்சும் போயி யாருகிட்டயாவது பேசிட்டு இருப்பாரு. நான் டாக்டரை வரச் சொல்லுறேன்.” என்று சமாளித்தார்.
அடுத்த சில நிமிடங்களில் டாக்டர் பாரத்குமார் பரபரப்புடன் வந்து வெளி நோயாளிகள் பிரிவில் அமர்ந்தார். நாம் அவரிடம் பேசியபோது, “இன்னைக்கு காலைல 8 மணில இருந்து 11.06 மணி வரைக்கும் 40 நோயாளிங்களை நான் ஒரு டாக்டர் இருந்து பார்த்திருக்கேன். எல்லா நோயாளிகளையும் பார்த்துட்டுத்தான் போனேன். அதுக்குள்ள சூப்பிரண்டுகிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிருக்கீங்க. அவரு ரெண்டு தடவை போன் பண்ணிட்டாரு. விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைலகூட பார்க்க முடியாத சர்ஜரிய நான் பண்ணிருக்கேன். அந்த நல்ல விஷயத்தை எல்லாம் பத்திரிகைல எழுதமாட்டீங்க. டாக்டர் டீ குடிக்கக் கூடாதா? டீ குடிச்சிட்டு வர்றதுக்குள்ள?” என்று டென்ஷனானார்.
டாக்டரோ, சாமானியரோ, டீ குடிப்பதற்கு முக்கால் மணி நேரத்துக்கு மேல் ஆகுமா என்பதுதான் கேள்வி! எத்தனை திறமையாகப் பணியாற்றினாலும் வேலை நேரத்தில் தனது இருக்கையில் டாக்டர் ஏன் இல்லை என்பதுதான் நோயாளிகளின் ஆதங்கம்!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த ஊனாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியம். இவரது வீட்டின் அருகில் பழமையான பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்தக் கோவிலில் பழமையான ஐம்பொன்னால் ஆன கிருஷ்ணர் சிலையும், அம்மன் சிலையும் வைத்து வழிபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் கோவிலில் இருந்த சாமி சிலைகள், கோவில் உண்டியல் மற்றும் பூஜை சாமான்கள் ஆகியற்றை கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர் கொள்ளை அடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
ஐயப்பன், சுப்பிரமணி
இதுகுறித்து கிராம மக்கள் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பெயரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சுப்ரமணியத்தின் பக்கத்து நிலத்தின் உரிமையாளரான சேகர் என்பவர் கிராமத்தில் இல்லாமல் இருந்துள்ளார். இதனால் பொதுமக்களுக்கு அவர் மீது சந்தேகம் வலுத்துள்ளது. இதன் காரணமாக அவரைப் பல்வேறு பகுதிகளில் தேடி வந்துள்ளனர். இந்நிலையில், சேகர் நேற்று இரவு ஊத்தங்கரை பகுதியில் இருந்ததைக் கண்டு அப்பகுதியைச் சேர்ந்த சிலர் சுப்பிரமணியத்திற்குத் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த சுப்பிரமணியம் மற்றும் கிராம மக்கள், சேகரிடம் மிரட்டி கேட்டதில் உண்மையை ஒப்புக்கொண்டார். பிறகு கொள்ளையடித்த பொருட்கள் எங்கே எனக் கேட்டதற்கு சாமி சிலைகள் உட்பட அனைத்தும், மத்தூர் அடுத்த புளியான்டப்பட்டி கிராமத்தில் உள்ள அருணாச்சலம் மற்றும் கண்ணம்மாள் என்பவர்களின் வீட்டிலும் அதே பகுதியில் உள்ள அவரது உறவினர்கள் வீட்டிலும் கொடுத்து வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஊர் மக்கள், சேகரை அழைத்துக்கொண்டு கண்ணம்மாள் வீட்டிற்குச் சென்று பொருட்களைக் கேட்டுள்ளனர். அப்போது கண்ணம்மாளும், அவருடன் இருந்த பிரியா என்ற பெண்ணும் சேர்ந்து, சேகர் பொய் சொல்வதாகக் கூறி அவரைத் தாக்கியுள்ளனர். அவர்களுடன் சேர்ந்து ஊர் பொதுமக்களும் சேகரை தாக்கியுள்ளனர். பிறகு சிலர் சென்று கண்ணம்மாளின் வீட்டில் சோதனை செய்துள்ளனர். சேகர் சொன்னபடி அவரது வீட்டில் எந்த பொருளும் இல்லை. அதேசமயம், கண்ணம்மாளின் மஞ்சள் தோட்டத்தில் ஒரு பையை எடுத்துள்ளனர். அதில் பூஜை பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்கள் கிடந்துள்ளன.
அந்தப் பையை கைப்பற்றிய ஊர் மக்கள் பிறகு சாமி சிலைகள் குறித்து சேகரிடம் கேட்டுள்ளனர். அதற்குப் பதில் சொல்லாமல் இருந்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த சுப்பிரமணி மற்றும் சிலர் சேர்ந்து சேகரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில், சேகர் பரிதாபமாகப் பலியானார்.
இதனைத் தொடர்ந்து சேகரின் மகள் முருகவள்ளி, ஊனாம்பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணி உள்ளிட்ட ஏழு பேர்தான் தன் தந்தையை அடித்துக் கொன்றதாக ஊத்தங்கரை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதற்குள் சுப்பிரமணி தலைமறைவானார். இந்தப் புகாரை ஏற்ற ஊத்தங்கரை காவல்துறையினர் சுப்பிரமணி உள்ளிட்ட ஏழு பேரைப் பிடிக்க மூன்று தனிப்படைகளை அமைத்தனர். அவர்களின் தீவிர தேடுதல் வேட்டையில், சுப்பிரமணி, ஐயப்பன், கண்ணம்மாள், பிரியா ஆகிய நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், அவர்களைச் சிறையில் அடைத்துள்ளனர்.