சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு தீர்மானங்கள், சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வருகிறது. அதன்படி மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பின்னர் சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “மக்களவை தேர்தலில் செய்கூலி, சேதாரம் இன்றி 40க்கு 40 வெற்றியை மக்கள் அளித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை ஆய்வு செய்தால் 221 தொகுதிகளிலும் திமுக வென்றுள்ளது. 2026இல் வெற்றிபெற்றுடுவோம் என்ற மமதையில் கூறவில்லை, மனசாட்சிப்படியே கூறுகிறேன். 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் மகத்தான வெற்றியைப் பெறுவோம்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் 24 மணி நேரத்தில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் பணியிட மாற்றம், காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சியினர் அரசின் நடவடிக்கைகள் போதவில்லை எனக்கூறுவது தோல்வியை மறைக்கும் முயற்சி. ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் கூட்டத்தில் பேசியபோது இனி கள்ளச்சாராயம் விற்கப்பட்டாலும் அல்லது அதனால் எந்தவித பாதிப்பு ஏற்பட்டாலும் அந்த மாவட்டத்தின் ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்தான் பொறுப்பு. அதனால் கடும் நடவடிக்கையை எடுங்கள் என்று கூறியிருக்கிறேன்.
கள்ளச்சாராயம் போன்றே போதைப் பொருள் விற்பனையை முற்றிலும் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதைப்பொருள் கடத்தல், விற்பனையில் ஈடுபட்டவர்களுடைய வங்கிக் கணக்குகளை முடக்கி, சொத்துகளைப் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படு வருகிறது. அரசு எதையும் மறைக்க வில்லை; முழுமையாக விசாரித்து வருகிறது.
கோடநாடு வழக்கில் இதுவரை 268 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருப்பவர்களிடம் இன்டர்போல் உதவியுடன் விசாரித்து வருகிறோம். தமிழ்நாடு சட்ட ஒழுங்கை காப்பதில் வெற்றிகரமாக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் காவல்துறைக்கான 190 அறிவிப்புகளில் 179 அறிவிப்புகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையில் பணியாற்றுபவர்களின் மன அழுத்தத்தைப் போக்க, பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தமிழ்நாடு இன்று இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக உயர்ந்துவருகிறது. தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, உட்கட்டமைப்பு, மனித வளர்ச்சி குறியீடு என எல்லா வகையிலும் வளர்ச்சியடைந்துள்ளது.” என்றார்.