தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் நலத்திட்ட உதவிகளைச் செய்துவந்தார். அரசியல் ஆசை காரணமாகத் தனது மக்கள் இயக்கத்தைத் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியாக மாற்றினார். கடந்த பிப்ரவரி மாதம் கட்சியை அறிவித்த விஜய், நமது இலக்கு நாடாளுமன்றத் தேர்தல் அல்ல, 2026 சட்டமன்றத் தேர்தல்தான் என்று அறிக்கை வெளியிட்டார்.
கட்சி தொடங்கியதிலிருந்து தற்போது வரை மக்களையோ, ஊடகத்தையோ சந்திக்காமல் இருக்கும் விஜய் சமூக வலைத்தள அறிக்கையின் மூலமாகவே கட்சியை நடத்திவருகிறார். வலைத்தளம் மூலம் வாழ்த்துக்கள் மட்டுமே தெரிவித்துவந்த விஜய் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து தமிழக அரசைக் கண்டித்துப் பதிவிட்டிருந்தார். அதேசமயம் மணிப்பூர் கலவரம், நீட் தேர்வு முறைகேடு உள்ளிட்ட பல சம்பவங்களுக்கு விஜய் ஏன் குரல்கொடுக்கவில்லை என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை விஜய் தெரிவிக்காததால், எந்த மாதிரியான அரசியலை முன்னிறுத்தி பயணிக்கப்போகிறார் என்று தெளிவில்லாமல் இருக்கிறது. இதுஒரு புறம் இருக்க, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானோ, விஜய்யின் அரசியலைத் தொடர்ந்து வரவேற்று வருகிறார். எந்தக் காலத்திலும் யாருடனும் கூட்டணி கிடையாது என்று கறார் கட்டிய சீமான் சமீபகாலமாக வேறு மாதிரியாகத் தெரிகிறார். செய்தியாளர்கள் ஒரு பேட்டியில் விஜய்யின் மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் செல்வீர்களா என்று கேட்டதற்கு, செல்வேன் எனப் பதிலளித்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கும், நாம் தமிழருக்கும் கூட்டணி அமையுமா? என்று கேட்டதற்கு, “விஜய் ஸ்டெய்லில் சொல்லவேண்டும் என்றால் ‘ஐ வெய்டிங்’(I am waiting) என்று பதிலளித்தார். இதனைத் தொடர்ந்து கூட்டணி உறுதி என்றே நாம் தமிழர் கட்சியினர் நம்புகின்றனர்.
கடந்த ஆண்டு மாணவர்கள் மத்தியில் பேசும் போது, அம்பேத்கர், பெரியார் மற்றும் காமராஜர் பற்றி மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டுமெனக் கூறிய நடிகர் விஜய், “நீங்கள்தான் (மாணவர்கள்) நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து புதிய நல்ல நல்ல தலைவர்களை நீங்கள்தான் தேர்ந்தெடுக்க உள்ளீர்கள். பணம் வாங்கிவிட்டு வாக்களிப்பது என்பது, நமது கண்களை நாமே குத்திக் கொள்வது போன்றுதான் எனத் தெரிவித்திருந்தார். இந்தப் பட்டியலில் அண்ணாவை விஜய் குறிப்பிடாததால் திராவிட கட்சிகளுக்கு எதிராகத்தான் களம்காண்பார் என்று பேசப்பட்டது. ஆனால் அதே சமயம் திராவிட கட்சிகளின் கொள்கைகளான தமிழ்நாட்டின் மாநில உரிமை, பிளவுவாத அரசியல் எதிர்ப்பு உள்ளிட்ட வார்த்தைகளின் விஜய்யின் முதல் அறிக்கையில் இருந்தது. இப்படியாக எந்த ஒரு தெளிவும் இல்லாமல்தான் இருக்கிறது விஜய்யின் தற்போதைய அரசியல்.
இந்தாண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்றது. கட்சி ஆரம்பித்து, இது முதல் விழா என்பதால், கூடுதல் கவனமும் இவ்விழா மீது இருந்தது. விழாவில் பேசிய விஜய், “தமிழ்நாட்டில் எல்லாமே இருக்கிறது. சிறந்த மருத்துவர்கள், பொறியியல் வல்லுநர்கள், வழக்கறிஞர்கள் உள்ளனர். ஆனால், நமக்கு என்ன அதிகம் தேவைப்படுகிறது என்றால், நல்ல தலைவர்கள் தேவை. தலைவர்கள் என்று அரசியல் ரீதியாக மட்டும் சொல்லவில்லை. ஒவ்வொரு துறையிலும் நமக்கு தலைவர்கள் தேவை. இப்போதைக்கு நல்லா படிங்க. மத்தத அப்புறம் பார்த்துக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் அரசியலும் கரியராக இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. நல்லா படித்தவர்கள் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா?.
நல்லதைக் கெட்டது மாறியும், கெட்டதை நல்லது மாறியும் சோஷியல் மீடியாவில் புரணி பேசுகிறார்கள். அதையெல்லாம் பாருங்கள். ஆனால், எது உண்மை என்று அறிந்து செயல்படுங்கள். அப்பொழுதுதான் இந்த நாட்டில் உண்மையான பிரச்சனை என்ன, மக்களுக்கு என்ன பிரச்சனை, சமூகத்தில் நடக்கிற தீமை, நன்மை பற்றியெல்லாம் தெரியவரும். அப்பொழுதுதான் ஒருசில அரசியல் கட்சிகள் செய்கிற பொய்யான பிரச்சாரத்தையெல்லாம் நம்பாமல் இருக்கலாம். எது நல்லது, எது கெட்டது என அறிந்துவிட்டு, நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கக்கூடிய ஒரு விசாலமான உலக பார்வையை உங்களால் வளர்க்க முடியும்.
தமிழ்நாட்டில் போதைப் பொருள் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் அதிகம் ஆகியிருக்கிறது. ஒரு பெற்றோர் என்ற முறையிலும், ஒரு இயக்கத்தின் தலைவர் என்ற முறையிலும் எனக்கு இது அச்சமாக இருக்கிறது. இதில் இருந்து இளைஞர்களைக் காப்பாற்றுவது அரசின் கடமை என்றும், ஆளும் அரசு இதையெல்லாம் தவற விட்டுவிட்டார்கள் என்றும் சொல்லலாம். அதைப் பற்றியெல்லாம் இங்கு பேச வரவில்லை. அதற்கான மேடையும் இது இல்லை. சொல்ல போனால், அரசாங்கத்தை விட நம்ம வாழ்க்கையை நம்மதான் பார்க்க வேண்டும். ‘உங்களுடைய மனக்கட்டுப்பாடு, தனி மனித ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். Say to temporary pleasures, say no to drugs’” எனத் தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் சமீபகாலமாகப் போதை கலாச்சாரம் அதிகமாக இருப்பதாகக் குற்றச்சாட்டப்படுகிறது. திமுக ஆட்சியில் போதை கலாச்சாரம் அதிகமாகிவிட்டதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றனர். இந்த சமயத்தில் போதைப் பொருள் பயன்பாடு குறித்துப் பேசிய விஜய், “இளைஞர்களைக் காப்பாற்றுவது அரசின் கடமை என்றும், ஆளும் அரசு இதையெல்லாம் தவற விட்டுவிட்டார்கள் என்றும் சொல்லலாம். அதைப்பற்றியெல்லாம் இங்குப் பேச வரவில்லை” என்று திமுக அரசை விமர்சனம் செய்வதுபோல் வந்து சட்டென வேறுபக்கம் பேச்சை மாற்றினார்.
அதேசமயம், தமிழ்நாட்டில் எல்லாமே இருக்கிறது. சிறந்த மருத்துவர்கள், பொறியியல் வல்லுநர்கள், வழக்கறிஞர்கள் உள்ளனர். ஆனால், நமக்கு என்ன அதிகம் தேவைப்படுகிறது என்றால், நல்ல தலைவர்கள்” என 50 ஆண்டுக்கால திராவிட கட்சிகளின் ஆட்சியைப் புகழ்ந்து பேசுவதுபோல் போகிற போக்கில் இதுவரை தமிழகத்திற்கு நல்ல தலைவர்களே கிடைக்கவில்லை என்ற ரீதியில் விஜய் பேசினார்.
இதன் மூலம் அரசியல் கட்சி ஆரம்பித்து களத்திற்குள் வந்தபிறகும் கூட ஒரு தீர்க்கமான குற்றச்சாட்டை விஜய்யினால் வைக்க முடியவில்லை. பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் தற்போது வரை சேஃப் ஷோன் அரசியல்தான் செய்துவருகிறார். எப்போதுதான் விஜய் தனது எதிர்க்கட்சி யார் என்று முடிவு எடுப்பார் எனத் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் போலவே நாமும் காத்திருக்கிறோம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.