தி.மு.க. மாநில மகளிரணி செயலாளரான கனிமொழி எம்.பி., சில வாரங்களுக்கு முன் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் புலம்பெயர் ஈழத் தமிழர்களின் முகாமைப் பார்வையிட்டார். அவர், துத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாப்பாத்தி, குளத்துள்வாய்பட்டி, மாப்பிளையூரணி ஆகிய மூன்று முகாமுக்கும் விசிட் அடித்தார். அவரைக்கண்டதும், அங்கிருந்த புலம்பெயர் ஈழத் தமிழர்கள், ஆரவாரமாய் வரவேற்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முகாமில் வசிக்கும் தாய்மார்கள் பாசத்தோடு, கனிமொழியை அவரவர் வீடுகளுக்கும் அழைத்தனர். அவர்களின் அன்பிற்கு இசைந்து ஒவ்வொரு வீடாகச் சென்று பார்வையிட்டார். முகாமில் வசிக்கும் 475 குடும்பங்களுக்கும் கரோனா நிவாரணமாக தலா 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கினார்.
அப்போது, மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவரை அழைத்து அன்பாக அவருக்குப் பண உதவியும் செய்தார். அங்கு வசித்து வரும் குடும்பங்களுக்கு கழிப்பறை வசதிகள் சரியாக இல்லை என்றும், அந்தப் பகுதியில் மின் வயர்கள் தாழ்வாகச் செல்வதால் தாங்கள் ஆபத்தை எதிர் நோக்கி இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், கூடுதலாகக் குப்பைத் தொட்டிகள், தண்ணீர் தேக்கத் தொட்டிகள் வேண்டும் என்றும் தங்கள் கோரிக்கைகளை வைத்ததோடு, தங்களின் நிரந்தர துயரத்தைத் தீர்க்க உதவும்படியும் கண்ணீர் மல்கக் கேட்டுக்கொண்டனர்.
அதையெல்லாம் கேட்டு குறிப்பெடுத்துக்கொண்ட கனிமொழி, அவர்களின் நிலை குறித்தும், தேவைகள் குறித்தும் முதல்வரின் கவனத்திற்கு உடனடியாக எடுத்துச் சென்றார். அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், முகாமில் இருக்கும் புலம்பெயர் ஈழத் தமிழர்களின் நல்வாழ்வுக்கான பல்வேறு திட்டங்களை, இன்று சட்டப் பேரவையில் அறிவித்தார்.
அவர் தனது உரையில், “கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது என்றால், கடல் கடந்து வாழும் தமிழர்களின் கண்ணீரால்” என்று எழுதினார் பேரறிஞர் அண்ணா. அத்தகைய பேரறிஞர் அண்ணாவினுடைய வழி நடக்கக்கூடிய இந்த அரசின் சார்பில், கடல் கடந்து வந்த இலங்கைத் தமிழ் மக்களின் கண்ணீரைத் துடைக்கக்கூடிய வகையில் சில அறிவிப்புகளை சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் இன்று வெளியிட நான் விரும்புகிறேன்” என்ற முன்னுரையுடன் அவர் ஏராளமான திட்டங்களை அறிவித்திருக்கிறார். இவற்றை அறிந்த புலம்பெயர் ஈழத் தமிழர்கள், கனிமொழியிடம் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்து வருவதோடு, முதல்வர் ஸ்டாலினுக்கும் தங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை ஆனந்தத் கண்ணீரோடு தெரிவித்து வருகின்றனர்.