"இனி வரும் காலங்களில் அரசு விழாக்களின்போது விழாவில் கலந்து கொள்ளும் முக்கியப் பிரமுகர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பதும், பொன்னாடை போர்த்தி கெளரவிப்பதை தவிரத்துவிட்டு அதற்கு பதிலாக புத்தகங்களையும், மரக்கன்றுகளையும் வழங்கும் நடைமுறையை பின்பற்றும்படி காரைக்கால் மாவட்ட ஆட்சியருக்கு புதுச்சேரி வேளாண் மற்றும் கல்வி துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் ஆலோசனை வழங்கி நடைமுறையும் படுத்தவும் செய்துள்ளார்.
அமைச்சரின் அந்த யோசனையை சிந்தித்து ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த்ராஜா, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத்துறைகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார்.
அந்த சுற்றறிக்கையில் என்னதான் கூறப்பட்டிருக்கிறது என்பதை ஆவளோடு படித்துப்பார்க்கும் அதிகாரிகளும் நெகிழ்ந்து புகழ்ந்துவருகின்றனர், அந்த அறிக்கையில்," காரைக்கால் மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாக்களின்போது பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் கெளரவிக்கப்படுகிறது. சால்வை மற்றும் பூங்கொத்துகளுக்கு பதிலாக புத்தகங்களையும், மரக்கன்றுகளையும் வழங்கும்படி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் அவர்கள் பரிந்துரைத்துள்ளார். பூங்கொத்தின் ஆயுட்காலம் மிகவும் குறைவு. ஒருவருக்கு அதை வழங்கும்போது அந்தநேரம் மட்டுமே அதுபயன்படும். அடுத்த நொடியே வீனாகிவிடும், குப்பைக்கு போய்விடும், ஆனால் ஒரு புத்தகத்தையோ, மரக்கன்றுகளையோ வழங்கும்போது அது வீடுகளின் ஒரு பகுதியாகவும், குடும்பத்தின் ஒரு பகுதியாகவும் மாறும். இதனால் செலவும் குறைக்கப்படுகிறது, மனநிறைவும் பெறுகிறது எனவே, அரசாங்க விழாக்களின்போதும், சிறப்பு சந்தர்ப்பங்களில் தலைவர்களை வாழ்த்தும்போதும் புத்தகங்கள் மற்றும் மரக்கன்றுகளை பரிசளிக்கும் நடைமுறையை அரசுத்துறை அதிகாரிகளும், பொதுமக்களும் வளர்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்". என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து அமைச்சர் ஆர்.கமலக்கண்ணண்," அரசு விழாக்களில் கலந்து கொள்ளும் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு பூங்கொத்து கொடுப்பதும், சால்வை அணிவிப்பதும் சம்பிரதாயமாக நடைபெற்று வருகிறது. இதனால் எந்த பலனும் கிடையாது. மாறாக புத்தகங்களை வழங்கினால் அது வாழ்க்கைக்கு எப்பொழுதும் பயனளிக்கும். அதுபோன்று மரக்கன்றுகளை வழங்கினால் அது சுற்றுச்சூழலை பராமரிக்க உதவியாக இருக்கும். எனவேதான் அரசு விழாக்களின்போது இதனை பின்பற்ற நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கினேன். இந்த நடைமுறையை பின்பற்றும்படி மாவட்ட ஆட்சியரும் அனைத்து துறைகளுக்கும் வலியுறுத்தியிருக்கிறார்." என்றார்.
சுற்றறிக்கை அனுப்பபட்ட அடுத்த நாளை திருபட்டினத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சியில் மரக்கன்றுகள் கொடுத்து வாழ்த்து தெரிவித்து நடைமுறைக்கு கொண்டுவந்துவிட்டனர். இதனை இனிவரும் காலத்தில் இது தொடர்ந்து பின்பற்றப்படும் என்கிறார்கள் அதிகாரிகள்.