கடலூர் மாவட்டத்தில் புவனகிரி, காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், கடலூர், பண்ருட்டி ,பரங்கிப்பேட்டை, விருத்தாசலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வருகிறது.
இதில் தமிழகத்தின் மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவு 47.5 அடியில் 46 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதில் 500 கன அடி வெளியேற்றப்படுகிறது. இப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வருவதை பார்த்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை தொடர்ந்து பெய்வதால் செவ்வாய்க்கிழமை கடலூர் மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டது. 3 மாதத்திற்கு பாசனத்திற்கு தேவையான தண்ணீர் நீர் நிலைகளில் சேமிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உயரும் விவசாயிகள் மத்தியில் கூறப்படுகிறது.
வடகிழக்கு பருவமழையின் முன்னெச்சரிக்கை பணியாக தமிழக வேளாண்மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கடலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மோகன். இ.ஆ.ப.,மாவட்ட ஆட்சித்தலைவர் .சிபி ஆதித்யா செந்தில்குமார் இ.ஆ.ப. உள்ளிட்ட வருவாய் துறையினர் காவல்துறையினர். நீர்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகளாக வடிகால் வாய்க்கால்கள் மற்றும் கால்வாய்கள் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்யும் விதமாக கடலூர் -சிதம்பரம் சாலை அருகே சின்ன வாய்க்கால் கெடிலம் ஆற்றில் கலக்கும் பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
மேலும் கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பச்சையாங்குப்பம் ஊராட்சி சொத்திகுப்பம் புயல் பாதுகாப்பு மையத்தில் பொதுமக்களை தங்க வைக்க ஏதுவாக மின்சாரம், குடிநீர், ஜெனரேட்டர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தயார் நிலையில் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்தார்கள். மேலும் அனைத்து புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் தற்காலிக தங்கும் இடங்களில் பொதுமக்களுக்கு உணவு தயார் செய்ய அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தயார் நிலையில் வைக்கவும், பாய் தலகாணி, போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் தயார் நிலையில் வைக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாசிமுத்தான் ஓடையை பார்வையிட்ட ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து மணலூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக வட்ட செயல்முறை கிடங்கில் அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொது விநியோக பொருட்கள் இருப்பு குறித்து ஆய்வு செய்து, உணவுப் பொருட்களை மழைக்காலங்களில் பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.