கடலூர் மாவட்டத்தில் 62 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் அந்த பகுதியில் விவசாயிகள் விளைவித்த நெல்லை அறுவடை செய்ததும் நேரடியாக இந்த கொள்முதல் நிலையங்களில் கொண்டுவந்து விலைக்கு விற்று வருகிறார்கள். இதில் பல்வேறு கொள்முதல் நிலையங்களில் பல நாட்கணக்கில் விவசாயிகள் அறுவடை செய்து கொண்டு வரும் நெல்லை விலைக்கு எடுத்துக் கொள்ளாமல் காக்க வைத்து வருகிறார்கள். இதனால் சமீப நாட்களாக பெய்து வரும் மழையினால் விவசாயிகள் அறுவடை செய்த நெல் நனைந்து மிகுந்த சேதத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்த சம்பவத்தின் அடிப்படையில் திட்டக்குடி அருகில் உள்ள தரும குடிக்காடு அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை கொள்முதல் செய்யாமல் 20 நாட்களுக்கு மேலாக காக்க வைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையினால் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. இதுகுறித்து விவசாயிகள் நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகளிடம் முறையிட்ட போது கடந்த 5ஆம் தேதியே நெல் கொள்முதல் நிலையத்தை மூடி விட்டதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமடைந்த விவசாயிகள் சேதமடைந்த நெல்லை ஒரு சாக்கில் அள்ளிக்கொண்டு வந்து சாலையில் வைத்து மறியல் செய்தனர். அப்போது அங்கு விசாரணைக்கு வந்த திட்டக்குடி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி முன்பு ஒரு விவசாயி மழையில் நனைந்த நெல்லை அவரது முன் கொட்டி விட்டு அவரது காலில் விழுந்து கதறி அழுதார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்கள் மனதை மிகவும் வருத்தியது. இதையடுத்து திட்டக்குடி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நெல் கொள்முதல் நிலையத்திற்க்கு கொண்டுவரப்பட்டுள்ள நெல்லை மூட்டைகள் அனைத்தையும் உடனடியாக எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர். அதே போன்று கம்மாபுரம் அருகிலுள்ள பெரிய கோட்டுட்டு முளை கிராமத்தில் தற்காலிகமாக நேரடி கொள்முதல் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையம் கடந்த சில நாட்களாக செயல்படாத காரணத்தால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கொண்டுவந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். அதேபோன்று விருத்தாசலம் அருகே உள்ள கொடுக்கூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல் மூட்டைகளை அமைச்சர் சி.வி. கணேசன் பார்வையிட்டார். அதன்பின்னர் விரைந்து விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் கால தாமதம் செய்யக்கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதேபோன்று ஸ்ரீஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டை பகுதியில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதற்கு முடியாமல் தவித்து வருகின்றனர். அங்கு உடனடியாக ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தியுள்ளனர். தமிழக அரசு வேளாண் விற்பனை மையத்தின் மூலம் ஆங்காங்கே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்துள்ளன. அப்படி திறக்கப்பட்ட கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்து கொண்டு அதற்குரிய பணத்தை பட்டுவாடா செய்யாமல் பலநாட்களாக காக்க வைப்பதால் விவசாயிகள் நெல் சேதமடைகின்றன. நெல் கொள்முதல் செய்வதில் தொடர்ந்து காலதாமதம் செய்யப்படுவதால் சமீபத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் விவசாயிகள் நெல் திறந்தவெளியில் வைக்கப்பட்டு அது மழையில் நனைந்து விவசாயிகளுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே விவசாயிகளுக்கு என தனி பட்ஜெட் அறிவிக்கும் தமிழக அரசு அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் .