மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தொகுதியில் தொடர் மழை காரணமாக பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கெல்லாம் ம.ஜ.க பேரிடர் மீட்புக் குழுவினர் நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். அவற்றைப் பார்வையிடுவதற்காக அப்பகுதிக்கு ம.ஜ.க பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி நேரில் ஆய்வு செய்தார்.
காலையில் தைக்கால், வடகால் பகுதிகளுக்குச் சென்றவர், மாலை திருக்கருக்காவூர் மற்றும் கீரானல்லூர் கிராமங்களுக்கு வருகை தந்தார். அங்கு வயலில் இறங்கி மூழ்கிய பயிர்களின் நிலை குறித்து விசாரித்தார். பிறகு அங்கிருந்த விவசாயத் தொழிலாளர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அவர்களின் பிரச்சனைகளை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாகக் கூறினார். பிறகு கீரானல்லூர் கிராமத்திற்கு வருகை தந்தார். இங்கு ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் கரீமா பர்வீன் ம.ஜ.க சார்பில் தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கு ம.ஜ.கவை சேர்ந்த, சபீர் அனைவரையும் வரவேற்று, கூட்டிச் சென்றார். அங்கு கிராம மக்கள் தங்கள் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதையும், கால்நடைகள் இறந்துள்ளதையும் சுட்டிக் காட்டினர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சீர்காழி தொகுதி பாரதி எம்.எல்.ஏ ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக எம்.எல்.ஏ கூறினார். அவருடன் மாநிலத் துணைச் செயலாளர் நாகை முபாரக், மாவட்டச் செயலாளர் சங்கை தாஜுதீன், மாவட்டத் துணைச் செயலாளர் ஆக்கூர் ஷாஜகான் மற்றும் ம.ஜ.க பேரிடர் மீட்புக் குழுவினரும் உடன் இருந்தனர்.