புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆற்றுப் பாசனம் இன்றி ஆழ்குழாய் மூலம் சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படுகின்றது. உற்பத்தி செய்த நெல்லை அரசு கொள்முதல் செய்யும் பொருட்டு மாவட்டம் முழுவதும் 99 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, இதுவரை சுமார் 31 ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஒருவாரமாக மாவட்டம் முழுவதும் நெல் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் கொண்டு வந்த நெல்மணிகள் மழையில் நனைந்து பாழானது. இதனால் பல இடங்களிலும் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை குடோன்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் நடந்து வந்தது. மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யாததால் விவசாயிகளின் நெல் மழையில் நனைந்துள்ளது. இந்நிலையில், உணவுப் பொருள் வீணாவதைத் தடுக்க உடனடியாக நெல் கொள்முதலைத் தொடங்க கோரி உணவுத்துறை அமைச்சருக்கு சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கோரிக்கை மனு கொடுத்திருந்தார். அமைச்சரின் கோரிக்கையையடுத்து இன்று காலை முதல் நெல் கொள்முதல் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நெல் கொள்முதல் நிலையங்களுக்குச் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, “விவசாயிகளின் நெல் கொள்முதல் தொடங்கியுள்ளது. அதனால் விவசாயிகள் அருகில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயனடையலாம்” என்றார்.
அரசின் இந்த நடவடிக்கை குறித்து விவசாயிகள் கூறியதாவது, "கொள்முதல் செய்யும் முன்பே மழையில் நனைந்த நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்து, பின்னர் அதனையும் நன்றாக நனையவிட்டுப் பல நாட்களுக்குப் பிறகு குடோன்களுக்கு கொண்டுசெல்வதால் நெல் பாதிக்கப்பட்டிருக்கும். அதனால் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பெரிய பாதுகாப்பு கிடங்கு அமைத்தால் உணவுப் பொருட்களை பாதிப்பில்லாமல் பாதுகாக்கலாம். மேலும், கீரமங்கலம், அறந்தாங்கி பகுதியில் அரசு நவீன நெல் அறவை ஆலை அமைத்தால் மாவட்ட மக்களுக்கு நல்ல அரிசியும் கிடைக்கும் நெல் வீணாவதையும் தடுக்கலாம்’ என்றனர்.