Skip to main content

“புத்தக விற்பனையாளர்களை வாழவையுங்கள்” - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.

Published on 18/11/2022 | Edited on 18/11/2022

 

 

minister kkssr ramachandiran spoke at the book festival virudhunagar

விருதுநகர் மாவட்டத்தில் முதன்முறையாக விருதுநகர்  மாவட்ட நிர்வாகமும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமும் இணைந்து விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி  மைதானத்தில் நவம்பர் 17 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையிலும் மொத்தம் 11 நாட்கள் புத்தகத் திருவிழாவை நடத்துகின்றனர்.

 

விருதுநகரின் முதலாவது புத்தகத் திருவிழாவை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவும் துவக்கி வைத்தனர். இவ்விழாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

 

minister kkssr ramachandiran spoke at the book festival virudhunagar

 

இத்திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்புத் திட்டங்கள் தொடர்பான கண்காட்சி, தொல்லியல் துறை மூலம் வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சி, சிறுவர்கள் விளையாட பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டுப் பகுதி மற்றும் பல்வேறு வகையான உணவு விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  

 

புத்தகத் திருவிழா துவக்க நிகழ்வில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாவை நடத்த வேண்டும் என வாய்மொழியாகச் சொல்லாமல் தமிழ்நாடு அரசு ஆணையே பிறப்பித்துள்ளது. மாணவர்களுக்கும், மக்களுக்கும் புத்தகங்கள் சென்றடைய வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். புத்தகத்தின் மீதான எனது பார்வை என்னவெனில், நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆடையை அணியலாம். புதிய ஆடைகளைக் கூட அணியலாம். ஆனால், நமது தாயின் பழைய சேலையில் இருந்து வரும் வாசம் எவ்வளவு பெருமை வாய்ந்த வாசமாக இருக்குமோ, அதைப்போல்தான் புத்தகங்களும். அது என்றென்றும் மனம் வீசியபடியே இருக்கும்” என்று  பேசினார்.  

 

minister kkssr ramachandiran spoke at the book festival virudhunagar

 

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனோ “அந்தக்காலத்துல கூட்டுக் குடும்பங்களா வாழ்ந்து வந்தோம். ஒருத்தர ஒருத்தர் கண்காணிச்சோம். இப்ப எப்படின்னா... ஒவ்வொருத்தருக்கும் தனி அறை இருக்கு.  கதவைப் பூட்டிக்கிட்டு செல்போனே கதின்னு கிடக்குறாங்க. இந்த உலகத்தை விட்டு வேற உலகத்துக்கு போயிடறாங்க. குடும்ப உறவுகளையும் மறந்துடறாங்க. முன்னால எல்லாம் பக்கத்து வீட்டுக்காரன், எதிர்வீட்டுக்காரன் நண்பனா இருந்தான். இன்னைக்கு பலரும் முகநூல்ல நண்பர்கள் வச்சிருக்காங்க. இந்த நிலையை மாற்ற புத்தகங்களால் மட்டுமே முடியும். நமது சரித்திரம் என்ன? தமிழன் யார்? நமது பெருமை என்ன? புத்தகங்களைப் படித்தால்தான் இதையெல்லாம் தெரிந்துகொள்ள முடியும். அனைவரும் புத்தகங்களை வாங்கி படிக்க வேண்டும். புத்தக விற்பனையாளர்களை வாழவையுங்க. அவங்க இல்லைன்னா... நமக்கு சரித்திரமே தெரியாமப் போயிரும்.” என்று இளைஞர்களுக்கு வழிகாட்டும் விதத்தில் பேசினார்.  

 

 

சார்ந்த செய்திகள்