Skip to main content

“ஜெயக்குமாரின் படுகொலைக்கு காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 04/05/2024 | Edited on 04/05/2024
Anbumani Ramadoss says Police should be held responsible for Jayakumar's Incident

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராக இருந்து வந்தார். தொழிலதிபரான ஜெயக்குமார் தனசிங் நேற்று முன்தினம் (02.05.2024) வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் பல இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். அப்போதும் ஜெயக்குமார் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவருடைய மகன் கருணையா ஜப்ரின் (வயது 28) உவரி காவல்துறையில் இது தொடர்பாக புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காணாமல் போன ஜெயக்குமாரைத் தீவிரமாக தேடி வந்தனர். காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் ஜெயகுமார் கரைச்சுத்து புதூரில் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த 3 தனிப்படைகள் அமைத்து திருநெல்வேலி எஸ்.பி.சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஜெயக்குமார் தனசிங் உடல் மீட்கப்பட்ட இடத்தில் எஸ்.பி. சிலம்பரசன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அதே சமயம் ஜெயக்குமார் தனசிங்கின் உடல் இருந்த இடத்தில் மோப்பநாய் உதவியுடன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி ஜெயக்குமார் தனது கைப்பட திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எழுதிய கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதே சமயம் ஜெயக்குமாரின் இந்தக் கடிதம் இதுவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகாராக எதுவும் அளிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

Anbumani Ramadoss says Police should be held responsible for Jayakumar's Incident

இந்த நிலையில், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்தச் சம்பவம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெயக்குமார் தனசிங், உவரியை அடுத்த கரைசுத்துபுதூர் என்ற இடத்தில் உள்ள அவரது தோட்டத்தில் கொடூரமான முறையில் எரித்துக் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. ஓர் அரசியல் கட்சியின் மாவட்டத் தலைவராக இருப்பவர், காவல்துறையில் புகார் அளித்தும் கூட அவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முழுமையாக பாதிக்கப்பட்டிருப்பதையே காட்டுகிறது.

காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் மகிழுந்து அவரது தோட்டத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது. அவரது உடல் இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்டுள்ளது. அவரது உடலின் பெரும்பகுதி எரிக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மைகளை வைத்துப் பார்க்கும் போது அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்புவதற்கு காரணங்கள் உள்ளன. அவரது உடலைப் படம் பிடிப்பதற்குக் கூட காவல்துறையினர் பத்திரிகையாளர்களை அனுமதிக்காதது ஐயத்தை உறுதி செய்திருக்கிறது. ஜெயக்குமாரை கடந்த 3 நாட்களாகவே காணவில்லை.

இது தொடர்பாக அவரது மனைவியும், மகனும் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அவர்களுக்கு முன்பாக கடந்த  ஏப்ரல் 30-ஆம் தேதி ஜெயக்குமாரே தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் காவல்துறை செயல்பட்டிருந்தால் ஜெயக்குமாரை காப்பாற்றியிருக்கலாம். ஆனால், காவல்துறை செயல்படத் தவறி விட்டது. ஜெயக்குமாரின் படுகொலைக்கு காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும். ஜெயக்குமார் படுகொலை வழக்கில் உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். குற்றவாளிகள்  கைது செய்யப்பட வேண்டும். இந்த வழக்கை தமிழகக் காவல்துறை விசாரித்தால் உண்மை வெளிவராது. அதனால் இந்த வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்