அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளியேறிய தே.மு.தி.க, அ.ம.மு.க, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதேசமயம் தனித்துப் போட்டியிடுவது குறித்தும் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், இறுதியில் ஒருவழியாக அமமுகவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டது தேமுதிக.
அ.ம.மு.கவுடனான தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, 60 தொகுதிகளில் தே.மு.தி.க போட்டியிட உள்ளது. கடந்த 14.03.2021 அன்று இரவு தே.மு.தி.கவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், தே.மு.தி.க பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது தொடர்பாக பேசுகையில், 'ஜெயலலிதாவிடம் இருந்த பக்குவம் எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை' எனப் பேசியிருந்தார் பிரேமலதா விஜயகாந்த்.
இந்நிலையில், பிரேமலதா விஜயகாந்த் மாறி மாறி பேசுவதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பிரேமலதா விஜயகாந்தின் கருத்து குறித்த கேள்விக்கு, “அவர் பேசுவது நேற்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு, நாளை ஒரு பேச்சு. கூட்டணிக்கு முன் ஒரு பேச்சு, கூட்டணிக்குப் பின் ஒரு பேச்சு” என்று விமர்சித்தார்.