திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கோனூர் ஊராட்சியில் சங்கான்குளம் உள்ளது 41 ஏக்கர் நிலப் பரப்புள்ள இந்தக் குளத்தை தூர்வாரி கொடுக்க வேண்டுமென்று ஊராட்சிமன்ற தலைவர் வெள்ளைத்தாய் தங்கபாண்டியன் தலைமையில், விவசாயிகள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதன் அடிப்படையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அந்த கோரிக்கை மனுக்களை பெற்ற உடனே தனது சொந்த செலவில் சங்கான்குளத்தை தூர்வாரி கொடுப்பதாக உறுதியளித்தார். அதன்படி சங்கான்குளத்தில் தூர்வாரும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் கு.சத்தியமூர்த்தி, முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் தங்கபாண்டியன், ஒன்றியகுழு உறுப்பினர் திருப்பதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சிமன்ற தலைவர் வெள்ளைத்தாய் தங்கபாண்டியன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்து கொண்டு தூர்வாரும் பணிக்கான பூமி பூஜை செய்து தூர்வாரும் பணியை துவக்கி வைத்தார்.
அப்போது விவசாயிகள் மத்தியில் பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, “தூர்வாரும் போது எடுக்கப்படும் வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டுமென்றும் எக்காரணம் கொண்டும் விற்பனைக்குக் கொண்டு செல்லக்கூடாது என உத்தரவிட்டதோடு, சங்கான்குளத்தை சிறப்பாக தூர்வாருவதோடு கரைகளை நன்றாக பலப்படுத்த வேண்டுமென்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்தக் குளம் தூர்வாருவதால் கோனூர், கரிசல்பட்டி ஊராட்சி, கசவனம்பட்டி, தருமத்துப்பட்டி பகுதி விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றார். தங்களின் கோரிக்கையை ஏற்று உடனே சங்கான்குளத்தை தூர்வார நடவடிக்கை எடுத்ததற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருக்கு கோனூர் வட்டார விவசாயிகள் பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.