கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி காடாம்புலியூர் திருவந்திபுரம் உள்ளிட்ட இடங்களில் அரசு பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று (ஆக.20) திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருவந்திபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வளாகத்தைச் சுற்றிப் பார்த்தார். பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து ஆசிரியர் கற்றுத் தரும் பாடங்களை மாணவர்கள் எவ்வாறு கவனிக்கிறார்கள் என்பதைப் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மாணவர்கள் நல்லொழுக்கம் அடைய மனவியல் சார்ந்து புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. மாணவர்களின் கற்றல் திறனில் எந்த அளவுக்கு உள்ளது என்ற முயற்சியில் இறங்கி உள்ளோம். நபார்டு வங்கிகள் மூலம் நிதிகள் பெறப்பட்டு பள்ளிகளுக்கு என்னென்ன தேவை என்பது ஆய்வு செய்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் மாணவர்கள் நலனுக்காக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு ஒரு லட்சத்து 14 ஆயிரம் மாணவர்களுக்கு 44 பகுதிகளில் மாணவர்கள் மனநலம் சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 800 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று மாணவர்களுக்கு மனநலம் சார்ந்து பயிற்சி அளிப்பார்கள்” என்றார்.
தொடர்ந்து திட்டக்குடியில் பள்ளி மாணவர்கள் முதியவரைத் தாக்கிய சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அவர், “திட்டக்குடியில் நடைபெற்ற சம்பவம் வேதனைக்குரியது. மாணவர்களுக்குக் கடுமையான தண்டனை அளிக்க முடியாது. மனநலம் சார்ந்து தான் மாணவர்களைத் திருத்த முடியும். அதுதான் எங்களது கடமை. மாணவர்கள் ஒழுங்கீனமற்ற செயல்களில் ஈடுபடும் போது உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மூலம் அறிவுறுத்தல் வழங்கப்படும். நம் வீட்டுக்குப் பிள்ளைகள் தவறு செய்தால் எவ்வாறு நல்வழிப்படுத்துவோமோ, அவ்வாறு நல்வழிப்படுத்துவோம்” என்றார். இதனைத் தொடர்ந்து அவர் புவனகிரி, சி.முட்லூர், லால்பேட்டை அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார்.