சாலையின் ஓரத்தில் பிரசவ வலியால் துடித்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பெண் போலீசார் பிரசவம் பார்த்து தாயையும், குழந்தையையும் காப்பாற்றியதோடு குற்றவாளியையும் விரைந்து கைது செய்தது பொதுமக்கள் மத்தியில் பெருமைப்பட செய்துள்ளது. அதோடு தஞ்சை சரக டி.ஐ.ஜி அந்தப் பெண் போலீசாரை அழைத்து பாராட்டி சான்றிதழும், வெகுமதியும் வழங்கியது காவல்துறை வட்டாரத்தையே பெருமையடைய செய்திருக்கிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பொற்றாமரை குளத்தின் கிழக்கு கரையில் முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆதரவற்ற நிலையில், மனநலம் பாதிக்கப்பட்டு அங்கேயே தங்கியிருந்தார். அவர் யாரிடம் பேசாமலும், யாசகம் பெறாமலும், எவருக்கும் தொந்தரவு கொடுக்காமலும் அங்கேயே அமைதியாக இருந்துவந்தார்.
காலையிலோ, மதியமோ, கோயிலுக்கு வருவோர் போவோர் யாராவது அவருக்கு உணவு கொடுத்தால், அதுவும் மனதில் வாங்கும் எண்ணம் தோன்றினால் மட்டுமே வாங்கி சாப்பிடுவார். இந்த சூழலில் அவர் கர்ப்பமாக இருந்திருக்கிறார். பெரிய நைட்டி அணிந்திருந்ததால் அவர் கர்ப்பமாக இருப்பது வெளியே தெரியாமலேயே இருந்துள்ளது. மேலும், வலியால் துடித்திருக்கிறார். பொற்றாமரை குளத்தின் கிழக்கு கரைக்கு கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தின் முதல்நிலை தலைமைக் காவலர் சுகுனா என்பவர் எதேச்சையாக சென்றபோது, அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் சுவரில் சாய்ந்துகொண்டு பிரசவ வலியால் முனங்கியபடியே துடித்திருக்கிறார். அதனை சற்றும் எதிர்பார்த்திடாத பெண் காவலர், அந்தப் பெண் பிரசவ வலியால் துடிக்கிறார் என்பதை உணர்ந்து, சற்றும் யோசிக்காமல் அந்தப் பெண் அருகில் சென்று பார்த்ததும் அதிர்ந்துபோயிருக்கிறார்.
அந்தப் பெண்ணுக்கு ரத்தம் வெளியேறிக்கொண்டிருந்ததைக் கண்டு எப்படி இந்தப் பெண் கர்ப்பமானாள் என யோசித்தபடியே அருகில் இருந்த மேற்கு காவல் நிலையத்துக்கு ஓடிச் சென்று அங்கிருந்த சில பெண் காவலர்களை உதவிக்கு அழைத்துக் கொண்டு, அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு முதலுதவி செய்தார். அப்போது அந்தப் பெண்ணுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்து தரையில் விழுந்துள்ளது. பின்னர் மேற்கு காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர் பேபி, காவல் நிலையத்தில் வைத்திருந்த தன்னுடைய இரண்டு சேலைகளைக் கொண்டுவந்து அந்தப் பெண் மீது போர்த்தி அவரைப் பாதுகாத்தார். பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்த பெண்கள் வந்து பிரசவித்த அந்த பெண்ணுக்கு செய்ய வேண்டியவற்றை செய்தனர். அதன்பிறகு 108 ஆம்புலன்ஸை வரவழைத்து, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக சேர்த்தனர்.
மேலும், அப்பெண்ணிற்கு உதவியாக இரண்டு பெண் காவலர்களையும் நியமித்தார் ஆய்வாளர் பேபி. இதுகுறித்து போலீசாரிடம் கேட்டோம், “மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்பதால், அந்தப் பெண்ணிடமிருந்து எந்தவித தகவலையும் பெற முடியவில்லை என்பதால், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப் பிரியாவுக்கு தகவல் கொடுத்தோம். மனநலம் பாதித்த பெண்ணுக்குப் பிரசவம் நடந்த இடம் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியாக இருந்தாலும், மேற்கு காவல் நிலையத்தின் பெண் காவலர்கள் அனைவரும் அங்கு சென்று அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்து தாயையும் சேயையும் காப்பாற்றியதைக் கேட்டு எஸ்.பி. ரவளிப்பிரியா பாராட்டினார். மேலும், மனநலம் பாதிக்கப்பட்ட பெண், குழந்தை பெற காரணமாக இருந்த அவனை தேடிவந்தோம்.
இந்தப் பெண் ஒரே இடத்தில் இருந்ததால், யார் அப்பெண்ணை இந்த நிலைமைக்கு ஆளாக்கியது என அக்கம்பக்கத்தில் விசாரித்தோம். அப்போது பாலக்கரையைச் சேர்ந்த ஒருவன் அடிக்கடி வந்து அப்பெண்ணை சந்தித்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்று (01.09.2021) நள்ளிரவு பாலக்கரைக்குச் சென்று அங்கிருந்த ஜான் (40) என்பவரை பிடித்து விசாரித்தபோது, இந்தப் பெண்ணைக் கர்ப்பமாக்கியது ஜான்தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவனை கைது செய்துள்ளோம்” என்கிறார்கள். ஆதரவற்ற பெண்ணுக்கு மனிதாபிமானத்தோடு பிரசவம் பார்த்ததும், உடனடியாக குற்றவாளியைக் கைது செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி, அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுபாஷினி, பெண்ணுக்குப் பிரசவம் பார்க்க உதவியாக இருந்த பெண் தலைமை காவலர் சரிதா, முதல் நிலை பெண் காவலர் சுகுனா ஆகியோரை தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி. பிரவேஸ்குமார் தன்னுடைய அலுவலகத்துக்கு வரவழைத்து வெகுவாக பாராட்டி, பாராட்டு சான்றிதழை வழங்கினார்.