தமிழக அரசின் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டின் கீழ், 313 எம்.பி.பி.எஸ் உள்பட 404 மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு புதன் கிழமை காலை தொடங்கி, இன்று வரை நடந்து வருகிறது.
இதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 59 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து, கலந்தாய்வில் கலந்துகொள்ள அழைப்புகள் அனுப்பப்பட்டிருந்தது. இதில், முதல் நாள் கலந்தாய்வில், 13 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, 11 மாணவ, மாணவிகள் அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தேர்வு செய்துள்ளனர். அதேபோல, நேற்று காயத்ரி என்ற மாணவி சுயநதிக் கல்லூரியைத் தேர்வு செய்துள்ளார். இதில், 5 மாணவ, மாணவிகள் கீரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படித்துத் தேர்வாகியுள்ளனர். மாவட்டம் முழுவதும் இருந்து, அரசு உள் ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க தேர்வாகியுள்ள அனைவருமே, மிகவும் வறுமையில் வாடும் ஏழை மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இன்று 11 மாணவர்களையும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த விழாவில், புதிய மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்குச் சில உபகரணங்களையும் சீருடையையும் வழங்கி அவர்களைப் பாராட்டினார். பிறகு, தனது சி.வி.பி அறக்கட்டளை சார்பில், அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையைக் கல்விக் கட்டணத்திற்காக வழங்கி, மேலும் உதவிகள் செய்யக் காத்திருக்கிறேன் என்றார்.
மேலும், கீரமங்கலம் அரசுப் பள்ளியில் இருந்து தேர்வாகியுள்ள 5 மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளையும் அழைத்து, "மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளீர்கள், உங்கள் சாதனை மேலும் தொடர வேண்டும்!" என்று பாராட்டினார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும் போது, "கிராமப்புற மாணவர்களுக்காக, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கிடைத்திருப்பதால், இத்தனை அரசுப் பள்ளிகளில் படித்த, ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளுக்குப் படிக்கச் செல்கிறார்கள். அதாவது, 404 மாணவர்களுக்கு இடம் கிடைக்கிறது. இது மேலும், விரிவடையும்" என்றார். கல்வி உதவித் தொகை பெற்ற மாணவர்களும், பெற்றோர்களும் அமைச்சருக்கு நன்றி கூறினார்கள்.