![For many years the people of the hills have been for proof of caste](http://image.nakkheeran.in/cdn/farfuture/45tzMxCmJKZaLsxbI6GoRtrMhHyI0tr1SayrQaN7OnI/1665766588/sites/default/files/inline-images/n21490.jpg)
சிதம்பரம் அருகே கொத்தங்குடி ஊராட்சிக்குட்பட்ட கதிர்வேல் நகர். தில்லையம்மன் நகர், அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள 20 அம்ச நகர் உள்ளிட்ட சிதம்பரம் நகரையொட்டி 100-க்கும் மேற்பட்ட மலைக் குறவர் சமூக மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். இவர்கள் பன்றி வளர்ப்பது, கூடை, முறம் உள்ளிட்டவற்றை பின்னி தெருத்தெருவாக வியாபாரம் செய்து வசித்து வருகின்றனர். தாங்கள் செய்யும் தொழிலை நமது பிள்ளைகள் செய்யகூடாது என இவர்களது பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து கல்வி பயில செய்து வருகின்றனர்.
பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்காததால் அவர்கள் பள்ளி படிப்பை தொடர முடியாத சூழ்நிலையில் உள்ளதாக கூறுகின்றனர். மேலும் அவர்களது முன்னோர்கள் மற்றும் இரத்த உறவு முறையினர் வைத்திருக்கும் சாதி சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசு உடனடியாக மலைக்குறவர் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிள்ளைகளின் கல்விகாக கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக சாதி சான்றிதழ் கேட்டு சிதம்பரம் வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று பலமுறை மனுக்கள் கொடுக்கப்பட்டதாகவும் இதற்கு இதுவரை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகின்றனர்.
இதுகுறித்து அந்தப் பகுதியில் வசிக்கும் தேவி என்பவர் கூறுகையில், ''தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருவர் இதே போன்று சாதி சான்று கேட்டு தரவில்லை என தீக்குளித்து இறந்து விட்டார். அதே மனஉளைச்சலில் தான் தாங்களும் இருக்கிறோம். முதல்வர் ஐயா உடனடியாக தலையிட்டு எங்கள் பிள்ளைகள் மற்ற சமூக மக்கள் போல் கல்வி பயின்று நல்ல நிலைக்கு செல்ல வேண்டுமா? அல்லது எங்களை போல் பன்றி மேய்க்க வேண்டுமா? என தாங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்'' என கூறினார்.