Skip to main content

எத்திலீன் ரசாயனம் தெளிக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல்

Published on 03/05/2023 | Edited on 03/05/2023

 

Mangoes sprayed with ethylene chemical were confiscated!

 

சேலம் அருகே, எத்திலீன் ரசாயனம் தெளித்து விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த 205 கிலோ மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். 

 

சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே உள்ள சூரப்பள்ளியில் உள்ள ஒரு சாலையோர பழக்கடையில் ரசாயனம் தெளிக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளதாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில், சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் அந்தக் கடையில் ஆய்வு செய்தனர். கடை நடத்துவதற்கான உரிமம் மற்றும் பதிவுச்சான்றிதழ் பெறவில்லை என்பது தெரியவந்தது. கடையில் சரியான முறையில் சுகாதாரம் பேணப்படாமலும் இருந்தது. மேலும், அந்தக் கடையில் இருந்து 100 மி.லி. எத்திலீன் எனும் ரசாயன திரவத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.  

 

இதுகுறித்து கடை உரிமையாளர் மாதம்மாளிடம் விசாரித்தனர். மாம்பழங்களை ஆய்வு செய்தபோது, பழங்களின் மீது எத்திலீன் திரவத்தை தெளித்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எத்திலீன் ரசாயனம் தெளிக்கப்பட்டு இருந்த 205 கிலோ மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் 
செய்து, அழித்தனர்.  

 

இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும், கடை நடத்துவதற்கான உரிமம் மற்றும் பதிவுச்சான்றிதழை உடனடியாக பெறுமாறும் அறிவுறுத்தினர். கடையில் உள்ள குறைகளை மூன்று நாள்களுக்குள் நிவர்த்தி செய்து, உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்கும்படியும், இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்கும்படியும் உத்தரவிட்டு உள்ளனர்.  

 

எத்திலீன் தெளிப்பால் தீங்கு ஏற்படுமா?

 

பொதுவாக பழச்சந்தைகளில் வாழை, மா ஆகிய பழங்களை வியாபாரிகள் கார்பைடு எனும் ரசாயன கற்கள் மூலம் செயற்கையாக பழுக்க வைக்கின்றனர். இதன்மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  

 

அதேநேரம், எத்திலீன் என்ற ரசாயனத்தை நேரடியாக பழங்களின் மீது செலுத்தாமல் செயற்கையாக பழுக்க வைக்க அனுமதிக்கின்றனர். பழங்களின் மீது தெளிக்காமல் எத்திலீன் கலவையை பழங்களின் குவியல் நடுவே ஒரு பாத்திரத்தில் வைத்து, அதன்மூலம் செயற்கையாக பழுக்க வைப்பதாலும், அந்த வகை பழங்களை உண்பதாலும் பொதுவாக உடலுக்கு எந்தக்கேடும் ஏற்படுவதில்லை.  

 

ஆனால், சீக்கிரம் பழுக்க வேண்டும் என்பதற்காக வியாபாரிகள் பழங்களின் மீது எத்திலீன் திரவத்தை தெளிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும், இந்த முறையில் பழுக்க வைப்பது உடல் நலனுக்கும் தீங்கானது உணவு பாதுகாப்புத்துறையினர் என எச்சரித்துள்ளனர் . 

 

 

சார்ந்த செய்திகள்